கருணாநிதி குடும்பத்தில் ஆண் பிள்ளை பிறந்தால்.. அம்பையில் இபிஎஸ் ஆவேச பேச்சு!
Author: Hariharasudhan21 October 2024, 12:15 pm
திமுகவின் வாக்கு வங்கி தான் 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் குறைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலி: அதிமுகவின் 53வது தொடக்க விழா பொதுக்கூட்டம், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியில் அதிமுக 53வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்.20) மாலை நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டியடிப்பு.. வெளியான வீடியோ.. குமரியில் பரபரப்பு!
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “திமுக ஆட்சியில் எந்த காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக சரித்திரம் கிடையாது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போதும், பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போதும் சரி பல போராட்டங்களையும் இன்னல்களையும் அதிமுக சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடந்த வாக்கெடுப்பில் திமுகவிற்கு ஆதரவாக சிலர் எதிர்த்து வாக்களித்தனர். அப்போதுதான் சில எட்டப்பர்கள் நம்மிடமே கண்கூடாகத் தெரிந்தது என சாடினார். மேலும், அப்படிப்பட்ட எட்டப்பர்களுக்கு கட்சியில் உயரிய பதவி வழங்கியதாக பகிரங்கமாக குறிப்பிட்ட அவர், பல லட்சம் பேர் இரவு பகல் பாராது உழைத்து அதிமுக ஆட்சி அமைத்ததை கலைப்பதற்கு சிலர் துணை போனார்கள் என குற்றம் சாட்டினார்.
அதிமுக எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது என மீண்டும் அதனை பதிவு செய்தார். அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திமுக நாடகம் போடுகிறது என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுகவின் குடும்பத்தில் தமிழக அரசு சிக்கி சின்னாப்பின்னமாகி உள்ளது. அதிமுகவை கருணாநிதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஸ்டாலினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதைப் போல உதயநிதி வந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமா?” என கேள்வி எழுப்பிய அவர், இது என்ன மன்னர் பரம்பரையா? எனவும் வினாவினார். அடிப்படை உறுப்பினர் பெரும் பதவிக்கு வருவது அதிமுகவில் மட்டும்தான் என பதிவிட்ட அவர், அதற்கு நானே சாட்சி எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
திமுகவில் உள்ள அமைச்சர்களின் குடும்பமும், கருணாநிதி குடும்பத்தைப் போன்ற அவர்களது குடும்பத்தினருக்கே பதவிகளை வழங்கி வருகின்றனர் எனவும் சாடினார். மேலும், “அதிமுகவின் சக்தியை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி பலம், பணபலம், கூட்டணி பலம் என அனைத்தையும் வைத்து 26.52 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
ஆனால், அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் கூட, 2019 தேர்தலை விட 2024ல் நடந்த மக்களவைத் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றது. ஆனால், திமுக தற்போது 7 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. திமுகவின் வாக்கு வங்கி தான் குறைந்து விட்டது, அதிமுகவின் வாக்கு வங்கி எப்போதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பான தகவல்கள், திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் என அனைத்திற்கும் பதில அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.