சனாதனத்தை காக்க நான் சாகக் கூட தயார்.. லட்டு உங்களுக்கு ஜோக் ஆகிவிட்டதா? நடிகர்களை விளாசிய பவன் கல்யாண்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 2:42 pm

புனிதமான திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதற்கு பரிகார தீட்சையை மேற்கொண்டு வரும் துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள துர்கா மல்லேஸ்வர சாமி கோயிலில் நடந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கோயிலில் அம்மனை வழிபாடு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் துர்கை அம்மன் கோவிலில் தேரில் இருந்த வெள்ளி சிங்கங்கள் காணாமல் போன சம்பவத்தை, அப்போதைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கிண்டலாக பேசினார்கள்.

வெள்ளிச் சிங்கங்கள் காணாமல் போன விவகாரத்தில் ​​இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள், அந்தச் சிங்கங்கத்தை வைத்து அரண்மனையா கட்ட முடியும் என ஏலனமாக பேசிக் கொண்டிருந்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் ஒய்.வி.சுப்பாரெட்டியும்,பூமனா கருணாகர் ரெட்டியும் மதம் மாறினார்களா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க: துரை தயாநிதி டிஸ்சார்ஜ்.. வீடியோ எடுக்க வந்த பத்திரிகையாளர்களை அடிக்க பாய்ந்த மு.க.அழகிரி! (வீடியோ)

இந்து மதத்தை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அவர்கள் அதை மறந்து விட்டதால் அவர்களிடம் கேள்வி கேட்கிறோம்.

ஜெகன் மோகன் நியமித்த அறங்காவலர் குழுவில் தவறு நடந்துள்ளது. ஆய்வக அறிக்கை வந்தாலும் அதனை ஏற்காமல் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களின் வாடிக்கையாகி விட்டது.

தவறு செய்யும் போது அதற்குப் பிராயச்சித்தம் தேடி கொள்ள வேண்டும். அல்லது அப்போது குழுவில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது குறித்து பேச வேண்டும். அதைவிட்டு உங்கள் விருப்பப்படி பேசுவது நல்லதல்ல.

இதுபோன்ற சமயங்களில் பிராயச்சித்தம் அல்லது மௌனம் சிறந்தது. இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருவழியாக இருக்க வேண்டும். மதச்சார்பின்மை என்பது ஒரு வழியாக இருக்ககூடாது.

pawan kalyan

மற்ற மதங்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் மீறப்படும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள். இந்துக்களின் உணர்வுகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், தர்மங்கள் மீறப்படும்போது நீங்களும் அதே போன்று கேள்வி எழுப்ப வேண்டும்.

சக இந்துக்களும் இதுபோன்ற நேரத்தில் மெளனம் காப்பதை தவிர்க்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு இடையூறு ஏற்பட்டாலும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும்.

சனாதன தர்மத்தை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வது நமது பொறுப்பு. லட்டு கலப்படம் ஆகிவிட்டது என்று சொன்னால் மதம் குறித்து பேசுகிறார்.

உயர்நீதிமன்ற ஏஜிபியாக பணியாற்றிய பொன்னவொலு சுதாகர் ரெட்டி பன்றிக் கொழுப்பின் விலை மிக அதிகம் என்றும், சாதாரண நெய்யில் எப்படிக் கலக்க முடியும் என்று மிகவும் கிண்டலாகப் பேசுகிறார்.

பொன்னவொலு சுதாகர் ரெட்டி அவரும் இந்துதான். இந்து மதத்தினரால் புனிதமாக கருதப்படும் லட்டு அவமதிக்கப்பட்டால், இந்து மதம் குறித்து அடாவடித்தனமாக பேசுகிறீர்கள்.

இந்த வார்த்தைகள் பக்தர்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்தும் வகையில் உள்ளது. திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் எனக்கு நல்ல நண்பர். அவர் மீது எனக்கு அளவற்ற மரியாதை உண்டு. ஆனால் இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சனாதன தர்மத்தையும், புனிதத்தையும் மீறும் போது பேசுவது கூட தவறு என்று சொன்னால் எப்படி..?

இதே தப்பு மசூதிக்கோ, சர்ச்சுக்கோ நடந்தால் இப்படி தான் பிரகாஷ் ராஜ் பேசுவாரா..? நாட்டில் என்ன நடந்தாலும் பேச இந்துக்களுக்கு உரிமை இல்லையா..? இந்து தெய்வங்களை நையாண்டி செய்வதையும், பலவிதமான கேலிகள் செய்வதையும் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டுமா ? எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா ? இதுதானா நீங்கள் பேசும் மதச்சார்பின்மை..?

திரைத்துறையினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். சனாதனம் தொடர்பான விஷயங்களில் கேலி செய்வது ஏற்புடையதல்ல. நேற்று ஒரு திரைப்பட விழாவில் இதே போன்று நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தனர். நிறைய உணர்ச்சிகளை உள்ளடக்கிய விவகாரத்தை பற்றி பேசும்போது கவனமாக இருங்கள்.

ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் விசாரனைக்கு வர வேண்டும் என்றால் அனைத்து கோப்புகள் மற்றும் பதிவுகள் கேட்கிறார். உங்கள் பதவிக்காலத்தில் தவறு நடந்தால் அது தொடர்பான கோப்புகளை தர வேண்டுமா..? உங்கள் ஆட்சியில் இப்படி கொடுத்தீர்களா..?

திருமலையில் கருணாகர் ரெட்டி பெரிய நாடகத்தை அரங்கேற்றினார். திருமலையில் ஏதேனும் தவறு நடந்தால் அவர்களது குடும்பங்கள் அழிந்துவிடும் என்று அவரே சபதம் செய்தார். உன் அழிவு ஆரம்பமாகிவிட்டது. மீதியை மேலே உள்ள கடவுள் பார்த்துக்கொள்வார்.

இவ்வளவு பெரிய விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அப்போதைய செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமறைவாக உள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

அவரது ஆட்சியில் திருமலை வணிகம் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டது. தர்மா ரெட்டியின் மகன் இறந்து விட்டால், 11 நாட்கள் கூட ஆவதற்கும் முன்பே கோவிலுக்குள் செல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.

ஆகம சாஸ்திரம் கடைப்பிடிக்கப்பட்ட திருமலையில் அவர் விருப்பப்படி செயல்பட்டார்.
இந்துக்களுக்கு நான் கைக்கூப்பி வேண்டுகிறேன் வெளியே வாருங்கள்.

சனாதன தர்மம் காக்க இறுதி வரை நான் போராடுவேன், தேவைப்பட்டால் உயிரையும் கொடுக்க தயார்.

நாம் பின்பற்றும் மத தர்மம் மீறப்படும் போது, ​​அதை கேள்வி கேட்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. சனாதன தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொறுப்பும் நமக்கு உள்ளது. நமது மௌனத்தால் சனாதன தர்மம் அழிந்து விடக்கூடாது என அவர் பேசினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!