இர்ஃபான் விவகாரத்தில் அரசியல் பின்புலம் தான்.. ஒப்புக்கொண்ட அமைச்சர் மா.சு!

Author: Hariharasudhan
22 அக்டோபர் 2024, 2:32 மணி
Ma Subramanian
Quick Share

இர்ஃபான் தொப்புள்கொடி அறுத்த விவகாரத்தில் பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், தொப்புள்கொடியை அறுத்து வீடியோ வெளியிட்ட இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யூடியூபர் இர்ஃபான் கடந்த மே மாதம், அவரது மனைவியின் கருவில் இருக்கக்கூடிய குழந்தையை துபாயில் ஸ்கேன் எடுத்து வெளியிட்டார். துபாயில் அதற்கான தடை இல்லாததால் தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்.

தகவல் தெரிந்தவுடன் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் சார்பில் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போது நோட்டீஸ் கொடுத்தோம். பின்னர், இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தான், இர்ஃபான் கடந்த வாரம் மருத்துவமனையில் அவருடைய குழந்தைக்கு தொப்புள்கொடியை அவரே அறுத்து எடுத்து, அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது கண்டிக்கக்கூடிய ஒரு விஷயம்.

மருத்துவமனை அறுவை அரங்கிற்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் உள்ளே சென்று தொப்புள்கொடியை துண்டித்திருப்பது என்பது, தேசிய மருத்துவச் சட்டத்தின்படி தண்டனைக்குரியது. மருத்துவ சட்ட விதிகளை மீறிய இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும், செம்மஞ்சேரி காவல் நிலையத்திலும் இர்ஃபான் மீது மருத்துவக்கல்வி இயக்குனரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது மட்டுமின்றி, அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த தனியார் மருத்துவமனை மீதும், பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் மருத்துவர் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. இந்த தொப்புள்கொடி அறுத்த விவகாரத்தில் மிக விரைவில் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.

இதனையடுத்து, இர்ஃபான் அரசியல் பின்புலத்தால் தப்பிக்கிறாரா என்ற கேள்விக்கு, “அரசியல் பின்புலத்தோடு தான் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு இருப்பதால் தான் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறோம். காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தர்பார் பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் கைது

பிரபலமானவர்கள் மன்னிப்பு கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் கேட்டதற்கு, ஸ்கேன் விவகாரத்தை பொறுத்தமட்டில், தமிழகத்தில் மட்டும் தான் தடை, துபாயில் தடை இல்லை, அதனால் வெளியிட்டது தவறு என்பதற்கு தான் கடிதம் கொடுத்தோம். அதனை அவர் இங்கு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை அப்போதே மூடியிருப்போம். தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் காப்பாற்ற முனையாது.

ஸ்கேன் விவகாரம் தமிழகத்தில் நடக்கவில்லை, துபாயில் நடந்துள்ளது. துபாயில் அதற்கு தடை இல்லை, விலக்கு உள்ளது. அதனால் அங்கு அதனைச் சொல்லிவிட்டார், எனவே உடனடியாக நோட்டீஸ் கொடுத்து தவறு என மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், தொப்புள்கொடி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், மன்னிப்பு கேட்டாலும் அவரை விட மாட்டோம். காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கச் செய்யக் கோரி துறையின் சார்பிலும் கடிதம் கொடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

  • விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
  • Views: - 51

    0

    0

    மறுமொழி இடவும்