ரூ.25,000 நிவாரணம் எதற்கு? கம்யூ எம்பிக்கு திமுக அமைச்சர் கேள்வி!

Author: Hariharasudhan
29 October 2024, 4:20 pm

மதுரையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதற்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சு வெங்கடேசனிடம் கேளுங்கள் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை: மதுரையில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகத்தால் கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மதுரை, முல்லை நகர் பீ.பீ.குளம் கண்மாய் 100 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் தேங்கியுள்ளது.

இருப்பினும், தண்ணீரை 90 சதவீதம் வெளியேற்றி விட்டோம். கண்மாயில் தண்ணீர் ஊற்று எடுப்பதால், தண்ணீர் முல்லை நகரில் தேங்குகிறது. ஆனால், மழைநீர் தேங்கவில்லை. எங்கே பாதித்துள்ளது? எதற்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அவரிடமே கேளுங்கள். மழை பாதிப்பால் நோய்த்தொற்று பாதிப்பு வராத வகையில், 60 மருத்துவ முகாம்கள் இருந்த நிலையில், தற்போது 107 மருத்துவ முகாம்களாக உயர்த்தப்பட்டு உள்ளது” என்றார்.

Su venkatesan

இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி வெளிப்படையாக மதுரை எம்பி சு.வெங்கடேசனின் வலியுறுத்தலுக்கு எதிராக பேசி உள்ளார். ஏற்கனவே திமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே மோதல்போக்கு நிலவி வருவதாக தகவல்கள் கசிந்தன. தற்போது, மதுரை மழை விவகாரத்தில், அது பூகம்பமாக வெடித்து இருக்கிறது. ஏனென்றால், மதுரை மழைப் பொழியும் நேரத்திலே எம்பி, நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: நான் முதல்வர், விஜய் துணை முதல்வரா? இபிஎஸ் தடாலடி பதில்

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பேரில் போஸ்டர் ஒன்றும் எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக மதுரையில் ஒட்டப்பட்டு இருந்தது. அதற்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த அவர், “ரேஷன் கடையில் தரமான பொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால், ஒருவருக்கு கோபம் வருகிறது. அது யாராக இருக்கும்? தரம் இல்லாத, எடை குறைவான பொருளை வழங்க காரணமானவராக இருக்கக்கூடும். அதற்கு எங்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து ‘எம்பியை கண்டா வரச் சொல்லுங்க’ என போஸ்டர் ஒட்டினர்” எனக் கூறினார்.

  • Manoj Bharathiraja Death யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!