பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்? மழுப்பும் துணை முதல்வர்.. எல்.முருகன் கேள்வி!

Author: Hariharasudhan
25 October 2024, 4:48 pm

அரசு நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (அக்.25) ‘திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம்’ நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, அங்கிருந்த சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடினர். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் வெளியில் வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக எல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் தான் கேட்கவில்லை.

எனவே, மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. இதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டாம்” எனக் கூறினார்.

இந்த நிலையில், இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அதன்படி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர்.

ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது.

ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக, அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா? இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா?

நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்னையாக்கி விடாதீர்கள்’’ என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அது டெக்னிக்கல் பால்ட்.. உதயநிதி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!

அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

TTV Dhinakaran

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சரும், ஆளுநரின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சரும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 188

    0

    0