“துரோகம் தியாகத்தைப் பற்றி பேசுகிறது.. மீண்டும் முற்றும் இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்!
Author: Hariharasudhan18 October 2024, 1:57 pm
துரோகம் தியாகத்தைப் பற்றி பேசுகிறது என, அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்ற இபிஎஸ் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
சென்னை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் என்னைச் சந்தித்ததாகக் கூறுவது பச்சைப்பொய். அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது, அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, மாறாக அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்” என நேற்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களைச் சேர்க்குமாறு மூத்த தலைவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை. அதிமுக இரண்டாகி விட்டது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம்” என காட்டமாக கூறினார்.
இந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா மறைந்த பிறகு துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.
ஏழு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சந்தித்தது. இதன்மூலம், முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி, இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட “துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.
இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும். அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தீபாவளி போனஸ் கேட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது.. கோவை மாநகராட்சியில் நடப்பது என்ன?
முன்னதாக, ஒன்றிணைந்த அதிமுக என்ற நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் அடுத்தடுத்து பேசி வரும் நிலையிலும், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அனுகியதாக அதிமுக ஒன்றிணைப்புக் குழு சொல்லும் நிலையில், அதனை முற்றிலும் இபிஎஸ் மறுத்து பேசியிருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையால் மீண்டும் இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.