ரூ.27 கோடி லஞ்சமா? ஓபிஎஸ் அணி நிர்வாகி இடங்களில் ED சோதனை!

Author: Hariharasudhan
23 October 2024, 11:15 am

ஓபிஎஸ் பிரிவில் உள்ள வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, 11 அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

2011 – 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார். தற்போது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் ஆதரவாளராகவும் உள்ளார். இந்த நிலையில் தான் வைத்திலிங்கத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாம்பரம் வீட்டு வசதி குடியிருப்பு பணியின் போது கட்டுமான நிறுவனத்திடம் 27 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் குழுமத்துக்குச் சொந்தமான ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவேட் என்னும் நிறுவனம், 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக ஆயிரத்து 453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.

ஆனால், அந்த திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு அதிக லஞ்சம், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது.

இதையும் படிங்க: ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!

மேலும், ஸ்ரீராம் நிறுவனம் குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்காக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு 27.9 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாகவும், அந்த லஞ்சப் பணம் பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்களான பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குனர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல காட்டப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்திருந்தது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!