கூட்டணிக்கு இழுக்கிறாரா பவன் கல்யாண்? இபிஎஸ் – ஓபிஎஸ்-க்கு ஒரே நேரத்தில் வாழ்த்து!

Author: Hariharasudhan
17 October 2024, 2:33 pm

அதிமுகவின் 53வது தொடக்க விழாவை ஒட்டி, இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமராவதி: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தற்போது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறது. இதனிடையே, கட்சியில் இருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு, செயற்குழு மேடையிலேயே நீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு பல்வேறு சட்ட ரீதியான அணுகுமுறை இருந்த போதும், கடைசி வரை கட்சி ஓபிஎஸ்-க்கு கை கொடுக்கவில்லை. இதனிடையே, அதிமுக முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் குறித்து சர்ச்சையாக பாஜகவினர் பேசி வந்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்ட வந்த நிலையில், வெளிப்படையாக பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குகு என்ற பேரில் பாஜக உடன் கூட்டணி அமைத்து சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். இதனிடையே, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் விரைவில் ஒன்றிணைந்த அதிமுகவாக மாறி ஆட்சியைப் பிடிக்கும் என கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல், வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற ஒன்றையும் தொடங்கினர். இப்படி அதிமுக எடப்பாடி தலைமையில் தனித்து பயணித்தாலும், அவ்வப்போது ஒன்றினைப்போம் என சில குரல்களும் வந்து நிற்பதை அரசியல் மேடையில் நாம் காண முடிகிறது. இந்த நிலையில், அதிமுக தனது 53வது தொடக்க விழாவை கொண்டாடுகிறது. இதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், அதனது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் நாள், எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அதிமுக தமிழ்நாட்டில் மிக குறுகிய காலத்தில் ஆற்றல்மிக்க அரசியல் சக்தியாக உயர்ந்து, ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து வரலாறு படைத்தது. எம்.ஜி.ஆர், எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு ஆழமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். பசி அறியாது, ஒவ்வொருவரும் கண்ணியமாக வாழ்வதை உறுதிப்படுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

தொலைநோக்கு கொண்ட அவரது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களே அவரது பெருமைக்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை தனது நிர்வாகத்தின் இரு கண்களாக கருதி அவர் செயலாற்றியதே தமிழ் நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றியது.
அந்நேரத்து மக்கள் பிரச்னைகளை, உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதோடு நில்லாமல், தொலை நோக்கோடு சீரான நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அவர் செயலாற்றினார். நல்லாட்சிக்கும், நிர்வாகத்திற்கும் எம்.ஜி.ஆரை எனது ஆசானாக நான் கருத இதுவே காரணம்.

அவரது மறைவுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை கட்டிக்காத்ததோடு மட்டுமல்லாது, தொலைநோக்கு கொண்டு தனது நிகரில்லா தலைமையால் மேலும் பல சாதனைகளை படைத்த பெருமை ஜெயலலிதாவைச் சாரும். “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காக அர்ப்பணிப்புடனும், தாயன்புடனும் அவர் செய்யலாற்றியதே தமிழக மக்கள் அவரை “அம்மா” என்று அன்போடு அழைக்க காரணமானது.

‘ஒன்றே குலம்’ என்ற அண்ணா வழியில் அண்டை மாநில மக்கள் மீதும் ஜெயலலிதா கொண்டிருந்த மரியாதை போற்றுதலுக்குறியது.தெலுங்கு மொழியில் சிறந்த புலமை கொண்டிருந்த ஜெயலலிதா, எம்மக்கள் மீதும் மிகுந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது, மகாகவி பாரதியார் எழுதிய “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்ற ஒருமைப்பாட்டை பறை சாற்றும் வரிகளை நினைவூட்டும் வகையில் அமைந்தது.

எடப்பாடி பழனிசாமியின் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் போதிலும் இக்கட்சி தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலாய் எம்.ஜி.ஆர் வழியில் இன்றும் திகழ்கிறது. ஜெயலலிதாவின் காலத்திலும், அவரது மறைவுக்குப் பிறகும் அதிமுக அரசின் முதலமைச்சராக அவரது வழியில் சிறப்பாக செயலாற்றிய ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இந்த நன்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : அரிய வகை நோய்? சமந்தாவை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் பிரபல வாரிசு நடிகர்..!!!

எனது ஜனசேனா கட்சி சார்பாக அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் கனவுகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வழியில் அதிமுக தமது பாரம்பரியத்தை நிறைவேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் போராட்ட குணத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் பூமி தமிழ்நாடு. சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த புன்னிய பூமியான தமிழகம் அவர்களின் அருளாசிகளால் என்றும் தழைத்தோங்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!