’அப்பா’ பட பாணியில் நெல்லையில் சம்பவம்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்

Author: Hariharasudhan
18 October 2024, 4:03 pm

நெல்லையில் உள்ள பிரபல நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயிலும் மாணவர்களை அதன் உரிமையாளர் பிரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி: கேரளாவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன். இவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி உள்ளார். இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நீட் பயிற்சிக்காக வரும் மாணவர்களிடம் இருந்து சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி மையம் சார்பாக மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்திய அம்மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார், இதனால் மாணவர்களுக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது, அதேபோல், நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால், அங்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணியை விட்டு விட்டு வர வேண்டும், அதற்காக பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு (செய்யப்பட்ட நிலையில், காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களைப் பார்த்து இந்த காலணி யாருடையது என கேட்டு, என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன், அந்த மாணவி மீது தூக்கி வீசுவது போன்றும், அந்த காலணி சக மாணவிகள் மீது விழுவது போன்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

இதையும் படிங்க : விஜய் கட்சியில் இணைகிறாரா KPY பாலா? த.வெ.க மாநாட்டில் பங்கேற்க மும்முரம்!

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர், மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் காலணியை மாணவி மீது வீசுவது போன்ற ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றும் மற்ற ஊழியர்கள், மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் இது தொடர்பாக புகார் சென்றுள்ள நிலையில், அவர்களும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 381

    0

    0