பதறியடித்து ஓடோடி வந்த மாஜி அமைச்சர் மகன்.. வீட்டுக்கு முன் பரபரப்பு!

Author: Hariharasudhan
23 October 2024, 12:52 pm

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அருளானந்த நகர் விரிவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சொந்த கிராமத்தில் இருந்த பிரபு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜராக வீட்டிற்கு வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த காலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கு ஒதுக்கீடு செய்ய 27 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, அமலாக்கத்துறையினர் இன்று (அக்.23) அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.27 கோடி லஞ்சமா? ஓபிஎஸ் அணி நிர்வாகி இடங்களில் ED சோதனை!

இதன்படி, தஞ்சை அருளானந்த நகர் விரிவாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் 4 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் வந்த நேரத்தில் பிரபு வீட்டில் இல்லாத காரணத்தால், அங்கு அமலாக்கத் துறையினர் காத்திருந்தனர். பின்னர், இது குறித்த தகவல் பிரபுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், தனது சொந்த கிராமத்தில் இருந்து கார் மூலம் அருளானந்த நகரில் உள்ள தனது வீட்டிற்கு பிரபு வந்தார்.

அப்போது, அவரது வீட்டு வாசலில் நின்றிருந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள், பிரபுவிடம் தைரியமாக இருங்கள், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என ஆறுதல் கூறினர். இதனையடுத்து, வீட்டினுள் சென்ற பிரபு, அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஆஜரானார். மேலும், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் குடியிருப்பிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!