இனி வடமாவட்டங்களில் நம்ம ஆட்டம் தான்.. சென்னையை மிரட்டும் மழை!

Author: Hariharasudhan
12 November 2024, 9:47 am

சென்னையில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. ஆனால், அது தாமதமானது.

இதனையடுத்து, தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று (நவ.11) பிற்பகல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன்படி, நேற்று இரவு (நவ.11) முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில், இன்று காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலை பகுதியில் 4.4 செ.மீ மற்றும் தரமணியில் 4.0 செ.மீ என அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.

SCHOOL LEAVES

தொடர்ந்து, இவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் – தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை (நவ.13) முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மாயமான நடிகை கஸ்தூரி… அக்கடா தேசத்தில் தேடும் தனிப்படை!

தொடர்ந்து, நாளை (நவ.13) இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் உள்பட ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 12ஆம் தேதியான இன்று, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!