போரால் கைகூடாமல் போன காதல்.. ரத்தன் டாடா அறியாத பக்கங்கள்!
Author: Hariharasudhan10 October 2024, 10:55 am
உப்பிட்டவனை மறக்காதே என்பதற்கிணங்க, இன்று ஏழை, நடுத்தர மற்றும் வசதி படைத்தோர் என அனைவரும் ஒரு நிமிடம் ரத்தன் டாடாவின் (Ratan Tata) வாழ்க்கையை இன்று புரட்டிப் பார்த்திருப்போம்.
மும்பை: “கடிகாரம் ஒலிப்பதை நிறுத்தி விட்டது. டைட்டன் (ரத்தன் டாடா) இறந்துவிட்டார். ஒருமைப்பாடு, நெறிமுறை தலைமை மற்றும் நன்கொடை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்கினார். அவர் வணிக உலகைத் தாண்டி ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். என்றும் நம் நினைவுகளில் அவர் உயர்ந்து நிற்பார்” என பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோங்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நேற்று இரவு குறிப்பிட்டிருந்தார். இது இந்தியாவை மட்டுமல்ல, உலக வணிகச் சந்தையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவின் முன்னணி தொழில் உற்பத்தி நிறுவனமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், எமிரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா நேற்று மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 86 வயதான இந்த வயோதிகர் தான், இன்று பல இளைஞர்களின் தொழில் கனவுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என அவர் பிறந்திருந்தாலும், ஒரு சாதாரண தொழிலாளியாக தனது குடும்ப நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய ரத்தன் டாடா, 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார்.
இந்த நேரத்தில் தான், டாடா குழுமம் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டது. நடுத்தர வர்க்கத்தினரும் காரைச் சொந்தமாக்க வேண்டும் என எண்ணி டாடா நானோ (TATA NANO) என்ற காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு வடிவமைத்து, அதனை சந்தைக்கு கொண்டு வந்து அனைத்து தரப்பட்ட மக்களின் நெஞ்சங்களிலும் புகுந்தார். அதிலும், குறிப்பாக ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய கார்களையும் சந்தைப்படுத்தி உலகம் முழுவதும் அதனை விரும்பும்படி செய்தார் என்றால் அது மிகையல்ல.

ஆனால், வளர்ந்த காலம் என்பது கடினமானதே. தமிழ் சினிமாக்களில் வருவது போன்று பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆம், 1937ஆம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடா, தனது 10வது வயதில், அதாவது 1948ஆம் ஆண்டு தனது பெற்றோர் பிரிவுக்குப் பிறகு, பாடி நவாஜ்பாய் டாடாவின் அரவணைப்பில் வளர்ந்தார். இதனையடுத்து, கர்னல் பல்கலைக்கழகத்தில் ஆர்கிடெக்சர் படிப்பை முடித்துவிட்டு, மேலாண்மை படிப்பை ஹார்வர்ட் பல்கலையில் படித்தார்.
இத்தனை இடங்களுக்குச் சென்றும் ரத்தன் டாடா காதலில் விழவில்லையா என்ற கேள்வி, வதந்திகளாக பரவ, பல வருடங்களுக்குப் பின்பு தான் அதற்கான விடை கிடைத்தது. காரணம், வாழ்நாள் இறுதி வரை திருமணம் முடிக்காமல் இருந்த ரத்தன் டாடா, லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
இதையும் படிங்க: தொழிலாளிகளின் முதலாளி…. இந்தியாவின் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய ரத்தன் டாடாவின் கடைசி வார்த்தைகள்!!
ஆனால், அந்த நேரத்தில் தான் இந்தியா – சீனா (1962) போர் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், காதலியின் பெற்றோர் இந்தியாவிற்குச் செல்ல மறுத்திவிட்டனர். இருந்தாலும், நான்கு முறை திருமணம் கைகூடினாலும், அதற்கு ரத்தன் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், அதே காதல் தான்.
இந்த நிலையில் தொழிலில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த ரத்தன் டாட, ஜேஆர்டி டாடாவால் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 1991ஆம் ஆண்டு அக்குழுமத்தின் தலைவராக உருவெடுத்தார். 2007ஆம் ஆண்டு எஃப் – 16 ஃபால்கனை ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையும் ரத்தன் டாடாவுக்கு உண்டு.
மேலும், செல்லப்பிராணிகள் மீது அலாதியான பிரியம் வைத்திருந்த ரத்தன் டாடா, நாய்கள் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார். அந்த வகையில், டாடா அறக்கட்டளை சார்பில், இந்தியாவிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அவசர சிகிச்சையுடன் செயல்படும் அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனை மும்பையில் திறக்கப்பட்டது.
இவ்வாறு டாடா குழுமத்தை நிறுவிய ஜம்சேட்ஜி டாடாவின் கொள்ளுப்பேரனான ரத்தன் நாவல் டாடா (Ratan Naval Tata) அனைத்து வகையிலும், தனது தொழில் மதியால் மாற்றியமைத்த ரத்தன் டாடா மறைந்த செய்தி அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.