எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்? சென்னைக்கு பேரதிர்ச்சி!
Author: Hariharasudhan15 October 2024, 3:57 pm
இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இன்று (அக்.15) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (அக்.16) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். முக்கியமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக்.17) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற அக்.18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் 19ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.