விஜய் திமுகவை எல்லாம் எதிர்க்கல.. தமிழிசை வைக்கும் கேள்வி
Author: Hariharasudhan9 November 2024, 5:15 pm
திமுகவை எதிர்க்கிறேன் என கூறிவிட்டு அவர்களின் சாயலில் தான் விஜய் பேசுகிறார், எனவே அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: பிளவுவாத சக்திகள் நமக்கு எதிரி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது முதல் மாநில மாநாட்டில் அறிவித்து இருந்தார். மேலும், மத்திய அரசை அவர் குறிப்பிடும் போது, ஒன்றிய அரசு என தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பிரபல தனியார் மாத இதழிடம் பதில் அளித்துள்ளார்.
அதில், ” முதலில் மத்திய அரசு குறித்தும், நீட், இருமொழிக் கொள்கைகள் ஆகிய மத்திய அரசின் தேசிய கொள்கைகள் குறித்தும், தனது எண்ணத்தை அவர் (விஜய்) மாற்றிக்கொள்ள வேண்டும். நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவை நிலைகுலைந்து இருக்கின்றன. ஆனால், இந்தியாவின் 25 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து நாங்கள் (மத்திய பாஜக அரசு) மேலே கொண்டுவந்து இருக்கிறோம்.
ஆனால், விஜய் வறுமையில் இருந்து மக்களை மீட்பேன் எனக் கூறுகிறார். ஏற்கெனவே, அதைத்தான் சிறப்பாக பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார். சிறுபான்மையின மக்களை பிரித்தாளுகிறார்கள் என்பதுதான் விஜய் போன்றோர் பாசிசம் என்கின்றனர். ஆனால், பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். எனவே, விஜய் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” மத்திய அரசு குறித்து புரிதல் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர். ஒன்றிய அரசு என குறிப்பிட்டு இருக்கிறார் விஜய். திமுகவை எதிர்க்கிறேன் எனச் சொல்லிவிட்டு அவர்களின் சாயலில்தான் பேசுகிறார். இதையடுத்து, திமுகவினர் சந்தோசமாக எங்களது கருத்தைத்தான் விஜய் சொல்கிறார் என்கின்றனர்.
எனவே, திமுகவை எதிர்ப்பதில் விஜய் தீவிரமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு என திமுக சொல்வதை வைத்து பேசுகிறாரா?. விஜய்க்கு தனித்தன்மை இருக்கு என்று நினைத்தேன். அது மொத்தமாக இல்லை. 20 ஆண்டுகள் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும் கல்வியை ஏன் மாநில பட்டியலுக்கு கொண்டுபோகவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: நடிகை மீனா கைது… போதையில் போலீசிடம் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு!
நீட் குறித்த தவறான பார்வை விஜய்யிடம் உள்ளது. இந்தியை மத்திய அரசு எங்குமே திணிக்கவில்லை. இடையூறும் செய்யவில்லை. அவரது தீர்மானங்கள் அனைத்தும் திமுகவின் சாயலில்தான் இருக்கிறது. பிறகு எப்படி திமுக எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வார். முதலில் குழப்பம் இல்லாத தெளிவான நிலைக்கு விஜய் வர வேண்டும்” எனவும் கூறி உள்ளார்.
0
0