ஸ்டாலினிடம் ஒரேயொரு கேள்வி தான்.. கடுப்பான தமிழிசை!

Author: Hariharasudhan
19 October 2024, 11:25 am

மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்று தமிழைக் கற்று வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் மறுக்கிறார் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சென்னை சேபபாக்கத்தில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மற்றும் இந்தி மாத கொண்டாட்டம் நிறைவு விழாவானது நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் ” தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வார்த்தை தவறவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆளுநர் தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், ” ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் ” என தெரிவித்திருந்தார்.

பின்னர் இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ” இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? ‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர், உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா? ‘ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆளுநரே, தமிழ் எங்கள் இனம், அது எங்கள் உயிர்மூச்சு, தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான். ‘பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி’ எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2,029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2,435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம்.

இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா? ‘திராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?

தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.

ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் – திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்? சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கருணாநிதி போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, திராவிடநல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ் மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : மீண்டும் மீண்டுமா? ரூ.58 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை!

இந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ” மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்கிறது என திமுக மீண்டும் மீண்டும் கூறுகிறது. இந்து – பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழன் பெயரிடப்பட்டு, அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை பிரதமர் மோடி எடுத்துச் சென்றுள்ளார். நான் ஒரேயொரு கேள்வியை மட்டும் முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கின்றேன். தமிழர்களின் பாரம்பரியமாக செங்கோல் திகழ்கிறது.

இதனை நாடாளுமன்றத்தில் நிறுவும்போது மற்ற மாநில பிரதிநிதிகள், ஏன் இதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் எனக் கேட்டனர். மும்மொழிக் கொள்கை என்பது தாய்மொழியைத் தாண்டி வேறு எந்த மொழிகளையும் படிக்கலாம். ஏன் அதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்? மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்கத் துவங்கி உள்ளனர். ஆனால், ஏன் இதுவரை தமிழ்நாட்டு மக்களை பிற மொழி கற்க இவர்கள் அனுமதிப்பதில்லை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 176

    0

    0