பாலம் அமைச்சு கொடுங்க.. ஆபத்தான பயணத்தில் திருவள்ளூர் கிராமத்தினர்..

Author: Hariharasudhan
17 October 2024, 12:45 pm

திருவள்ளூரில் பெய்த கனமழையால் வண்ணிப்பாக்கம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் தற்காலிக கம்பி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வட மாவட்டங்களில் அது கனமழை பெய்தது. முக்கியமாக, சென்னை உள்ளிட்ட KTCC மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

ஆனால், நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் சென்றதால், சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சில இடங்களில் மழைத் தூறல் விழுந்து வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் ஏரி நிரம்பியது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் வண்ணிப்பாக்கம் செல்லும் சாலையானது மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது.

எனவே, இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாதை துண்டிக்கப்பட்டாதால், அவ்வழியாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு கனமழையிலும் அப்பகுதியில் ஏரி நீர் புகுவதால் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், தற்போது மழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் ஊரைக் கடந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடாக, இரும்புக் கம்பிகளைக் கொண்டு ஊராட்சி சார்பில், வினோத முறையில் தற்காலிக தடுப்பு அமைத்து இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடந்து செல்ல அமைத்துள்ளனர். இதில் அவர்கள் ஆபத்தான நிலையில் கடந்து சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க : சும்மா ஜாலிக்கு பண்ணோம்.. ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பள்ளி மாணவர்களிடம் விசாரணை!

இதனால் விரைந்து அப்பகுதியில் தரைப்பால சாலையை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வெள்ள நீரானது நெற்பயிர்கள் இடையே சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!