விசிக – விஜய் தொடங்கிய கணக்கு.. அஸ்திவாரம் போடும் காங்கிரஸ்.. என்ன செய்யப் போகிறது திமுக?
Author: Hariharasudhan28 October 2024, 5:25 pm
அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என தமிழக காங்கிரஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, நேற்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய், தவெக கொள்கை, செயல்திட்டங்கள், கொடி மற்றும் கட்சி பெயர் விளக்கம் ஆகியவற்றை அளித்தார்.
அப்போது, திராவிட மாடல், குடும்ப அரசியல், ஊழல் மலிந்த் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என அவர் தெரிவித்தார். அதேநேரம், பிளவுவாத சக்திகள் நமக்கு எதிரி என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டணி உண்டு என்பதை சூசகமாக தெரிவித்த விஜய், அதிகாரத்திலும் பங்கு என்பதையும் அவர் கூறினார்.
இந்த நிலையில், அதிகாரத்திலும் பங்கு என்ற விஜயின் பேச்சுக்கு விசிக ஆதவ் அர்ஜூனா வரவேற்பு தெரிவித்து இருந்தார். அதேபோல், விஜயின் 50 நிமிட அரசியல் கன்னிப் பேச்சில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய பிரதான எதிர்கட்சிகளை அட்டாக் செய்யவில்லை என்ற பொருளும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் தரப்பில் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: ரஜினிக்கு பதில் விஜய்? அப்பாவு கூறும் அரசியல் கணக்கு
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சரவணன், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நேற்று நடைபெற்ற அவரது கட்சி மாநாட்டில் 2026-இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.
ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது.
இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி, தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.