திமுக ஆட்சி இருக்கும் வரை.. ஆர்.என்.ரவி மாற்றமில்லையா?

Author: Hariharasudhan
21 October 2024, 7:57 pm

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பதவிக்கால முடிவடைந்த நிலையில் அவரது பதவி தற்போது வரை திரும்பப் பெறப்படாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக தற்போது ஆர்.என்.ரவி இருந்து வருகிறார். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு மேகாலயா மற்றும் நாகலாந்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார் இந்த நிலையில், தற்போது வரை அவரே ஆளுநர் பதவியில் நீடித்து வருகிறார்.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 156 இன் படி, ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். அதேநேரம், குடியரசுத் தலைவரால் ஆளுநர் திரும்பப் பெறாமல் இருந்தால் அவரது பதவி நீடித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தாலும், ஆளுநர் பதவியில் இருந்து அவரை விலக்க முடியாது என சட்டம் கூறுகிறது.

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதியான வி.கே.சிங், ஓய்வு பெற்ற பிறகு பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

இதன் அடிப்படையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் வேலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பாளராக வி.கே.சிங் பணியாற்றினார். இவரது பார்வையின் கீழே பாஜக தேர்தலில் வலம் வந்தது. அதேநேரம், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராகவும் வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் தமிழகத்தின் புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் கசிந்தன. ஆனால் தமிழ்நாடு ஆளுநராக தற்போது உள்ள ஆர்.என்.ரவியின் பதவி திரும்ப பெறப்படாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு பெரும் கேடு.. காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டு

தமிழ் மொழி, திராவிடம் போன்றவை மீதான ஆளுநரின் கருத்துக்கள் அவ்வப்போது எதிர்மறையாக உருவாகி, அதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆளுநர் பதவியே தேவையில்லை எனவும் திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 212

    0

    0