கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Author: Hariharasudhan
21 October 2024, 1:51 pm

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழா இன்று (அக்.21) நடைபெற்றது. இதில் துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இதனையடுத்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்துள்ளேன். இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதலாக வந்தது திண்டுக்கல் மாவட்டம் தான்.நான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது.

திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை. கொட்டும் மழையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு என்னை வரவேற்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்களைச் சந்தித்தேன். மிகப்பெரிய வெற்றியை திண்டுக்கல் தொகுதியில் கொடுத்துள்ளீர்கள். 40க்கு 40 என நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை இருந்தது. அண்ணா, பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்தனர், நானும் கூறினேன். நான் சொல்லாததை பொய்யாகத் திருத்தி, இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன், மன்னிப்பு கேட்க மாட்டேன்.

Udhayanidhi Stalin

அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பல பேர் இந்தியைத் திணிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை, அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியைத திணிக்க முயற்சிக்கின்றனர்.

இதையும் படிங்க: எல்.முருகன் அருந்ததியர் இல்ல.. ஆர்.எஸ்.எஸ் சங்கி : திருமாவளவன் பகீர் விளக்கம்!

இதற்கெல்லாம் பல பேர் துணை போக முயன்றனர். முதல்வர் செய்த செயலால் அனைவரும் மண்ணைக் கவ்விக் கொண்டுள்ளனர். அண்ணா சூட்டிய தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தார் ஒருவர். தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடைசியில் அவர் மன்னிப்பு கேட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்தி தினிப்பை தமிழ்நாடு ஏற்காது.

மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்” என்றார்.

  • AR Rahman wife health issues சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?
  • Views: - 165

    0

    0