அது டெக்னிக்கல் பால்ட்.. உதயநிதி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
Author: Hariharasudhan25 October 2024, 2:23 pm
அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (அக்.25) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ‘திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம்’ நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதன்படி, அங்கிருந்த சிலர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினர். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வெளியில் வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை.
எனவே, மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. இதை ஒரு பிரச்னையாக மாற்ற வேண்டாம்” எனக் கூறினார்.
முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டிடி தமிழ் தொலைகாட்சி அலுவலகத்தில், இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சொந்தக் கட்சி எம்பிக்களே வைத்த கெடு.. பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா?
அதற்கு ஆளுநரும் பதிலடி கொடுக்க, மீண்டும் அதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையாகியுள்ளது.
மேலும், உதயநிதி நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், கண்டமிதில் (கண்டம் + இதில்), கண்டமதில் (கண்டம் + அதில்) என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என பாடியுள்ளனர். மேலும், திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘திருநாடும் ..’ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் கேட்காமல் இருந்துள்ளது. எனவே, மீண்டும் உதயநிதி ஸ்டாலின் பாடச் சொல்லியிருக்கிறார்.