அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
Author: Hariharasudhan2 November 2024, 5:03 pm
சீமானின் கடும் தாக்கு, திருமாவளவனுடன் ஒரே மேடை என அடுத்தடுத்து பரபரப்புக்கு உள்ளான விஜய், தவெகவின் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகத் திகழும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் துவக்கினார். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெகவின் முதல் மாநில மாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை, கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, கூட்டணி உள்ளிட்ட அனைத்தையும் பற்றி விளக்கிப் பேசினார்.
குறிப்பாக, “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா ஆகியோரின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” என்றார். மேலும், “கொள்கை கோட்பாடுகள் என்றால், திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்” எனவும் விஜய் கூறினார்.
அதேபோல், மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்பதும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பறுவதும் கட்சியின் கொள்கை என தெரிவித்த விஜய், நம்முடன் (தவெக) கூட்டணியில் வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் எனக் கூறினார். அதேநேரம், கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாதா என தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர் ஆகியோரையும் விஜய் கைகாட்டினார்.
இதற்குப் பிறகு, திமுகவை தமது அரசியல் எதிரி என முழுமையாக கூறிய விஜய், பாஜக மற்றும் காங்கிரஸை கடுமையாக எதிர்க்கவில்லை என்றும், ‘அவர்கள் செய்வது பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?’ எனவும் அவர் கேள்வி எழுப்பியது சரியான நிலைப்பாட்டக் கொடுக்கவில்லை என்றும் அரசியல் கருத்துகள் நிலவியது. அதேநேரம், அதிகாரப்பகிர்வை பொது மேடையில் பேசியிருந்த திருமாவளவன், விஜய் அதிகாரப்பகிர்வை திரைமறைவில் பேசியிருக்க வேண்டும் என மாநாட்டிற்குப் பிறகு கூறினார்.
மிக முக்கியமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘என்னை எதிர்த்தாலும் நான் அவரை (விஜய்) ஆதரிப்பேன்’ என்றார். ஆனால், மாநாடு முடிந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாதகவின் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம், இன்றைய செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றில், ‘கொள்கை என்பது வேறு, அண்ணன் தம்பி என்பது வேறு’, என்றும், ‘நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினர், கூட்டத்தை வைத்து கணக்கு போடக்கூடாது’ எனக் கூறினார்.
இதையும் படிங்க : வாய்ப்பில்ல ராஜா.. வாத்தியார் தவறு செய்ய மாட்டார்.. அடித்துச் சொல்லும் சீமான்
இவ்வாறு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நாளை (நவ.3) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, நாளை சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அழைப்பு விடுத்து உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.