வேகமெடுக்கும் தவெக மாநாடு.. ஆங்காங்கே ஆனந்த்.. விஜய் வருவாரா?

Author: Hariharasudhan
14 அக்டோபர் 2024, 5:16 மணி
TVK Vijay
Quick Share

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள மூன்று புதிய குழுக்களை அமைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெக கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை வெளியிட்டார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய கொடியில் யானை மற்றும் வாகை மலர் இடம் பெற்றிருந்தது.

இந்த யானை, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால், அந்தக் கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால், கட்சிக் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதனையே கட்சியின் முதல் வெற்றியாக அவரது தொண்டர்கள் கருதினர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமம் அருகே நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து, தவெக மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையும் 22 முக்கிய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. மேலும், கட்சி மாநாட்டுக்கான பூமி பூஜை, பந்தக்கால் நடும் பணியோடு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நிகழ்ந்தது.

மேலும், கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் புஸ்ஸி என்.ஆனந்த் என்ற அக்கட்சியின் பொதுச் செயலாளரே சென்று வருகிறார். எனவே, திரைப்படத்தில் நடிப்பது போன்று ஆடியோ விழாவிற்கு வந்தால் போதும் என்பது போல் மாநாட்டுக்கு மட்டும் விஜய் வருவாரா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான தொகுதிப் பார்வையாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று உத்தரவிட்டார். இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொகுதிகள் அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் மாநாட்டு தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 7 தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

TVK

இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுப் பணிகளுக்காக தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு, தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காணொளிக் கண்காட்சி அமைப்புக் குழு ஆகிய 3 குழுக்களை அமைத்து பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்தான அறிவிப்பில், “தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் இருவரும் அடங்கிய சிறப்புப் பிரிவு. மாநாட்டில் தலைவரின் பிரத்யேகப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் பாதுகாவல் படையினரை மேற்பார்வை செய்வர். இத்தனியார் பாதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.

இதையும் படிங்க: விஷப்பூச்சியே அவருதான்.. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல காரணம் அண்ணாமலை இல்ல..வெளியான வீடியோ!

மேலும் இந்தக் குழுவின் தலைமை நிர்வாகிகள், முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி, தனியார் பாதுகாவல் படையின் உதவியுடன் வழிகாட்டும் குழு, பாதுகாப்புக் குழு, போக்குவரத்துக் குழு, வாகன நிறுத்தக் குழு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை. சீருடை அணிந்த தன்னார்வலர்கள் குழுக்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கான நெறிமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தும் கூடுதல் பணியினையும் ஆற்றுவர்.

கட்சியின் தலைமைச் செயலகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, மாநில மாநாட்டுக்குத் தேவையான ஒலி, ஒளி வடிவ காணொளிக் காட்சிக்கான (Audio Visuals) தயாரிப்புப் பணிகளையும் மேற்கொள்வர்.

இத்துடன், மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் சீருடை அணிந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் பணிகளில் அதற்கெனத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ‘தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ ஈடுபடும்.

காணொளிக் கண்காட்சி (Video Exhibition) அமைப்புக் குழுவானது. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாகப் பரிணாமம் அடைவதற்கு முன்பு, ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாகி, பின்னர் தளபதி மக்கள் இயக்கமாக வளர்ந்து பல்லாண்டுகளாகத் தமிழக மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆற்றிய பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்த காணொளிக் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளைக் கவனிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் தான் தமிழக வெற்றிக் கழக கொடிக்கான விளக்கம், கட்சிக் கொள்கைகள் என அனைத்தையும் விஜய் தெரிவிப்பார்.

  • CM Stalin பங்கம் செய்யும் பாஜக…பாராட்டும் ஆளுநர்…தமிழக அரசியலில் என்ன நடக்குது?
  • Views: - 81

    0

    0

    மறுமொழி இடவும்