யாருக்கெல்லாம் நாளை விடுமுறை? எந்த துறைகளெல்லாம் நாளை இயங்கும்?

Author: Hariharasudhan
15 October 2024, 7:35 pm

அத்தியாவசியத் தேவைகள் சார்ந்த துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே நாளை மறுநாள் (அக்.17) காலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தை நெருங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. சில சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். அதேபோல், வியாசர்பாடியிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மீட்கப்பட்டு அருகில் தயார் நிலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்? சென்னைக்கு பேரதிர்ச்சி!

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை (அக்.16) சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகவும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது வீட்டிலிருந்தோ பணியாற்ற அறிவுரை வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத்துறை, காய்கறிகள், இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் மற்றும் பிற கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை எதிரொலியாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அறிவித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?