சொந்தக் கட்சியினராலே சீண்டப்படும் சீமான்.. நாதகவில் என்ன நடக்கிறது?
Author: Hariharasudhan10 October 2024, 1:53 pm
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், நீக்கம் என இருந்து வரும் நிலையில், சீமானின் அரசியல் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணம் நாதக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை: திரைப்பட இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்து மறைந்தவராக கருதப்படும் பிரபாகரனை முதன்மையாக வைத்து, தமிழர் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி அரசியல் மேடையை அலங்கரித்து வருபவராக சீமானும், நாதகவும் செயல்படுகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக அவரது கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம், விலகல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன், விழுப்புரம் தொழில்நுட்பப் பிரிவு (NTK IT Wing) செயலாளர் சுதன் ராஜூ மறும் திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு ஆகியோர் விலகினர். முக்கியமாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சென்னை மாவட்ட நிர்வாகி புகழேந்தி மாறன் நாதகவில் இருந்து விலகினார்.
இவர் கட்சித் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். மேலும், சீமானுடன் மிகுந்த நெருக்கமாக இருந்த வெற்றிக்குமரன் நீக்கப்பட்டார். அதேபோல், கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட ராஜா அம்மையப்பன் விலகினார் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல், சில நிர்வாகிகள் கட்சியில் இருந்தாலும் விலகி நிற்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், நாதக முக்கிய நிர்வாகி அபிநயா பொன்னிவளவன் கட்சியில் இருந்து விலகும் தொனியிலான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “கட்சி விலகல் கடிதம், நான் கடந்த 4 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன். படிக்காத நான் மேடை பேச்சாளராக எண்ணி முதன்முதலாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச முயற்சி செய்தேன் முடியவில்லை.. பெண்களுக்கு 50% இடம் என்ற கட்சியில்.. துணிவுள்ள, கொள்கை பிடிப்புள்ள எனக்கு வேட்பாளராக வாய்ப்பு தரப்படவில்லை. தொகுதி பொறுப்பில் உள்ள என் கணவரிடம் சீமான் அவர்கள் “நான் பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்தியேக நாற்காலி வாங்க சொத்தை விற்று 5 லட்சம் தர வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். இதனால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். இதுவரை என்னுடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி. இப்படிக்கு நான்..” என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணியா? எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு!
இது நாதக நிர்வாகிகள், வடக்கு மண்டலப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்று நான்காம் இடம் பிடித்தார். பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார் அபிநயா. இதனால் அவரது இந்த விலகல் பதிவு கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த அனல் அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரங்களில், “சில அவதூறுகளின் அவதூறுகளை அருவருப்பாக்கும் செய்திகள்,
தான் வீழ்ந்தாலும் தன் இனம் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை ஏற்ற தலைவன் வழி நடக்கும் எங்களை ஒன்றும் செய்யாது. பேரன்பும் பெருங் கோபமும் கொண்ட என்னுயிர் அண்ணன் சீமான் வாழும் சம காலத்தில் நான் வாழ்வதையே பெருமையாக கருதுகிறேன்” என்ற பதிவையும், “என் உயிர் மூச்சு உள்ளவரை அண்ணனின் விரல் பிடித்து அரசியலில் பயணிப்பேன்” என்ற மற்றொரு பதிவையும் போட்டிருந்தார். மேலும், சீமான் மேடையில் பேசும்போது, அவரை அபிநயா பார்ப்பது போன்ற நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இருப்பினும், நாதக நிர்வாகிகள் அடுத்தடுத்து இப்படி ஷாக் கொடுப்பது ‘நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து போட்டி’ என்ற டேக்லைனை மாற்றி அமைத்து விடுமோ என்ற நிலை வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து நாதக பயணிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் பேச்சுகள் ஓடுவதால் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சிப் பூசல் சற்று விறுவிறுப்படைந்துள்ளது. கடைசியில், “எதுக்கும் பயப்படாத நானே பயப்புடுறேண்ணா பாரு..” என்ற சீமானின் பேச்சு, இறுதியில் அவருக்கே வந்து விட்டதோ என்ற பேச்சும் அரசியல் மேடையில் வந்துவிட்டது.