ராணுவ வீரர்கள் உடன் விஜய் திடீர் சந்திப்பு.. அரசியல் கணக்கில் அடுத்த படியா?

Author: Hariharasudhan
9 November 2024, 7:43 pm

தளபதி 69 படப்பிடிப்பில் இருந்த விஜய், திடீரென ராணுவத்தினர் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கோட். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களையே எதிர்கொண்டது. இருப்பினும், பல்வேறு லாஜிக் தாண்டிய விஷயங்கள் ரசிகர்களை திரையரங்குகளில் விசிலடிக்க வைத்தது.

இதனிடையே, தான் கமிட்டாகியுள்ள கடைசிப் படத்தில் நடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை விஜய் வெளியிட்டு, ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் விஜய் தொடங்கினார்.

அதேநேரம், தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். முழுக்க முழுக்க அரசியல் களத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு மற்றும் நரேன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மாநிலத்தை விட்டு வெளியில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு உள்ளார். இதில் முன்னாள் ராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதில் சில வார்த்தைகளையும் விஜய் பேசி உள்ளார். பின்னர், அங்கிருந்த ராணுவத்தினர் மற்றும் குழந்தைகள் உடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அதேநேரம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது. இதில், தவெகவின் கொள்கை, அரசியல் நிலைப்பாடு, அரசியல் மற்றும் கொள்கை எதிரி, செயல்திட்டங்கள் ஆகியவற்றை விஜய் அறிவித்தார். இதன் மூலம் ஆளும் திமுகவே தனது பிரதான அரசியல் எதிரி என்பதை விஜய் தெளிவுபடுத்தினார். அதேபோல், பிளவுவாத சக்திகளுக்கு எதிராக இருக்கிறோம் என பாஜகவை மறைமுகமாகக் கூறினாரா என்பது இன்றுவரை சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Vijay with children

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது ராணுவ வீரர்களைச் சந்தித்தது மரியாதை நிமித்தமாக, தளபதி 69 படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்ற நிலையில், அழைப்பின் பேரில் விஜய் சென்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது அமரன் பட வெற்றியைத் தொடர்ந்து, ராணுவத்தினர் உடன் விஜய் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்து உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: விஜய் திமுகவை எல்லாம் எதிர்க்கல.. தமிழிசை வைக்கும் கேள்வி

மேலும், இந்த சந்திப்பு மூலம் அனைத்து விதமான வாக்குகளையும் விஜய் கவர்வதற்குத் தயாராகி விட்டார் என்றும், அதனை வகை வகையாகப் பிரித்து அரசியல் காய்களை கச்சிதமாக நகர்த்தி வருகிறார் என்றும் அரசியல் மற்றும் சினிமா விமர்சகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!