கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்

Author: Hariharasudhan
8 November 2024, 1:44 pm

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத விஜய், கடும் விமர்சனம் செய்த சீமானுக்கு வாழ்த்து கூறியது அரசியல் மேடையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்த மாதம் அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தினார். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விளக்கம், கொள்கை விளக்கம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டைக் கூறினார்.

இதன் மூலம் முழுக்க முழுக்க தமிழகத்தின் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்தே விஜய் அரசியல் செய்ய உள்ளது உறுதியானது. ஆனால், சாயம் பூசுவார்கள் என்ற வார்த்தையை வைத்து, பாஜகவையும் விஜய் எதிர்க்கிறார் என்ற கருத்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனை பாஜக பிரமுகர்களின் பேட்டிகளில் காண முடிகிறது.

அதேநேரம், திராவிடமும், தமிழ் தேசியமும் நமது இரு கண்கள் என்றார் விஜய். இதில், திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வந்தார். மேலும், ஒன்று கருவாட்டுக் குழம்பு எனக் கூற வேண்டும், இல்லையென்றால் சாம்பார் எனக் கூற வேண்டும், அது என்ன கருவாட்டு சாம்பார் என கேள்வி எழுப்பினார் சீமான்.

மேலும், ஒன்று வலப்பக்கமாக நிற்க வேண்டும் அல்லது இடப்பக்கமாக நிற்க வேண்டும், நடுவில் நின்றால் லாரி மோதி செத்து விடுவாய் என விஜயை கடுமையாக விமர்சித்தார். இதற்கு, சீமானின் இளம் தம்பிகளை விஜய் கவர்ந்து விடுவார் என்ற அச்சத்தில் சீமான் விஜயை கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடிகரும், இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். அதில், ” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக, மாநாட்டுக்கு முன்பு, அவர் (விஜய்) என்னை எதிர்த்தாலும் நான் விஜயை ஆதரிப்பேன் என்ற சீமான், மாநாட்டுக்குப் பிறகு விஜயை கடுமையாக விமர்சித்தார். ஆனால், விஜய் தற்போது சீமானுக்கு வாழ்த்து கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரம், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதையும் படிங்க : அடிமேல் அடி வாங்கும் அமரன்.. காஷ்மீர் நடிகர் கூறுவது என்ன?

இந்த நிலையில், கமலுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் சீமானுக்கு வாழ்த்து கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதலில் தனியாக மாற்று அரசியலில் பயணிப்பதாக டிவியை உடைத்த கமல்ஹாசன், பின்னர் திமுக உடன் இந்தியா கூட்டணியில் இருப்பதும், தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரியின் அணியில் மநீம இருப்பதும் இதற்கு காரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 436

    0

    0