4,791 ஏக்கரில் பரந்தூர் விமான நிலையம்… 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 12:42 pm

சென்னையில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்தின் மூலமாக, அடுத்து வரும் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரில் தொழில்துறையின் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் ஆளாகியுள்ளது.

எனவே, நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, போதிய இடவசதி கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது.

அதன்படி, பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன.

இதுதொடர்பாக திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு மாநிலங்களவையில் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்க்குட்பட்ட பரந்தூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம், நெல்வாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, புதிய விமான நிலையம் அமைக்க 4,791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இங்கு போதுமான இடம் மற்றும் வான்வெளி உள்ளது.

விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கான விரிவானப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் பகுதியில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான நிதி திரட்ட பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, ’டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதி ஆகியவற்றைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!