திமுக தேர்தல் வாக்குறுதி 100% நிறைவேற்றமா?…. CM ஸ்டாலின் மீது பாயும் கேள்விக் கணைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 9:12 pm

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசும்போது 99 சதவீத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி விட்டது, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை செப்டம்பர் 15ல் தொடங்கி வைக்கும்போது அது 100 சதவீத வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியதை தொடும் என்று குறிப்பிட்டு இருப்பது தமிழக அரசியலில் விவாதத்துக்குரிய ஒன்றாக உருவெடுத்துள்ளது.

முதலமைச்சர் தெரிந்தே பேசுகிறாரா அல்லது யாரோ எழுதிக் கொடுத்ததை தெரியாமல் அப்படியே வாசிக்கிறாரா? என்ற கேள்விக்கணைகளும் அவர் மீது பாய்ந்துள்ளன.

சொன்னதை செய்தோம்!!

2024 நாடாளுமன்றத் தேர்தலை அவர் மனதில் வைத்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “திமுகவை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, கவலைப்படுகிற ஒரு கட்சி திமுகதான். அதனால்தான் இன்றைக்கும் நாம் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறோம்.

2019-ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 6வது முறையாக நம்முடைய ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற்றோம்.

இப்படி தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை தந்தோமோ அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

100க்கு 100 வாக்குறுதி நிறைவேற்றம்

இன்னும் சொல்கிறேன் 100க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு “விடியல் திட்டம்” என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பின் “புதுமைப் பெண் திட்டம்” பள்ளிப் படிப்பை முடித்து அரசு கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்”என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டு இருக்கிறார்.

முதலமைச்சர் சொல்வது போல திமுக அரசு அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதா? என்ற கேள்வி தமிழகத்தில் திமுகவுக்கு வாக்களித்தவர்களையும் கடந்து அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

ஏனென்றால் 2021 மார்ச் மாதம் 13 தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 63 தலைப்புகளில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

எதிர்க்கட்சிகள் கேள்வி

சில மாதங்களுக்கு முன்பு வரை 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று திமுக அமைச்சர்களில் பலர் மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தனர். இது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

திமுக அரசு நிறைவேற்றியதாக கூறப்படும் வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட முடியுமா? என்றும் கேள்வியும் எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிட்டது.

திமுக சொன்னதும் செய்ததும்

2021ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானவை என்று சொன்னால் இவற்றை குறிப்பிடலாம்.

“அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணம் இல்லா பயண வசதி, ஆவின் பால் லிட்டருக்கு விலை மூன்று ரூபாய் குறைப்பு, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, பட்டப் படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன் தாலிக்கு 22 கேரட்டில் எட்டு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

அதேபோல் படிக்காத ஏழை குடும்ப பெண்களுக்கு உதவித் தொகை தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் அத்துடன் தாலிக்கு எட்டு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வு திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும். கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியத் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயன் பெறுவர்.

30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ரத்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாய், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4500 ரூபாய், அரசுத்துறை கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கேரளாவில் வேளாண் விலை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிக்கப்பட்டு
அந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டம் ஆராயப்பட்டு அதனை தமிழகத்திலும் செயல்படுத்துவோம். சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகள் துயர் அடைவதை தவிர்ப்போம்” என்று பணப்பயன் தொடர்பான 40க்கும் மேற்பட்ட கவர்ச்சி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

வரவேற்பும் எதிர்ப்பும்

இவற்றை கடந்த இரண்டரை ஆண்டுகளில் சொன்னது போல திமுக அரசு நிறைவேற்றி விட்டதா?… சமூக நல ஆர்வலர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் கேட்போமே!

“2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளூர் பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணம் இல்லா பயணம், ஆவின் பால் லிட்டருக்கு விலை மூன்று ரூபாய் குறைப்பு போன்ற வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் தேர்தலில் நகர உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணம் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்துவிட்டு கடைசியில் சாதாரண வெள்ளை போர்டு வைத்த பஸ்களில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மறுக்கப்பட்டது. என்றபோதும் இத்திட்டம் கிராமப்புறங்களில் மகளிர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் அதையும் கூட பொன்முடி போன்ற ஒரு சில சீனியர் அமைச்சர்கள் நீங்க ஓசிலதானே பயணம் போறீங்க என்று பெண்களை கிண்டல் செய்து இத்திட்டத்தின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கவும் செய்தனர்.

சப்பை கட்டு கட்டிய திமுக

தேர்தல் வாக்குறுதிப்படி ஆவின் பால் விலை குறைப்பு செய்யப்பட்டாலும் கடந்தாண்டு
கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தவும்பட்டது. கேட்டால் சாதாரண, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் விலையை நாங்கள் உயர்த்தவில்லையே என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கும் குறையாமல் நகையை அடமானம் வைத்தவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார்கள். இதனால் 49 லட்சம் பேர் தங்களது கடன்களை தள்ளுபடி செய்யும்படி அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால் 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 600, 700 பேர் வெவ்வேறு பெயர்களில் நகைகளை அடமானம் வைத்து மோசடியாக கடன் பெற்றுள்ளனர் என்ற காரணத்தை கூறி 36 லட்சம் பேரை பலத்த அதிர்ச்சியடைய வைத்து விட்டனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு இப்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் தேர்தலின்போது
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். இப்போது தகுதியுள்ள ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்குவோம் என்கிறார்கள். இதனால் மீதியுள்ள ஒரு கோடியே 20 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு எதுவும் கிடைக்காது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

60 ஆயிரம் ரூபாயை இழக்கும் ஏழை பெண்கள்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போது ஒரு கோடியே 50 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குவோம் என்று காங்கிரஸ் அறிவித்து ஆட்சிக்கு வந்த பின்பு அதை செயல்படுத்தியும் விட்டது. ஆனால் திமுக அரசோ ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கே இரண்டரை வருடங்கள் ஆகிப்போனது.

புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதை முதலமைச்சர் ஸ்டாலின் மிகப் பெருமையாக கூறுகிறார்.

ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அறிவித்த பட்டப்படிப்பு படித்த பெண்களின் திருமணத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாயும் தாலிக்கு ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்ததை அப்படியே ஓரங்கட்டி வைத்து விட்டுத்தான் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த ஒப்பீட்டின்படி பார்த்தால் திமுக ஆட்சியில் படித்த ஏழை பெண்களுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை பண இழப்பு ஏற்படுகிறது.

அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொன்னார்கள். 2021 ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தனர். டீசல் விலை குறைக்கப்படவே இல்லை. மேலும் பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் எப்போது குறையும் என்பதும் தெரியவில்லை. இத்தனைக்கும் மத்திய அரசு இந்த மூன்றாண்டு காலகட்டத்தில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டது. அதைவிட வேடிக்கை என்னவென்றால் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வாக்குறுதி அளித்ததே திமுக அரசுக்கு மறந்து போய்விட்டது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் இன்று விரக்தியில் நொந்து போய் உள்ளனர்.

கேரளாவில் வேளாண் விளை பொருட்களுக்கு தகுந்த விலை கொடுப்பது போல தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதை நிறைவேற்றி இருந்தால் கடந்த மாதம் தக்காளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை சென்றிருக்காது. விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்திருக்கும். ஆனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் 40 நாட்கள் தக்காளியை மறக்கும் நிலைக்கு செல்ல வேண்டியதாயிற்று.

மேலும் மாநிலத்தின் பல இடங்களில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வெண்டைக்காயை சாலையில் கொட்டி அழிக்கும் அவலமும் நடந்திருக்காது

30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

505க்கு 505 ஆ? லிஸ்ட் போடுங்க முதல்வரே!!

இது தவிர மாவட்ட அளவில் ஏராளமான வாக்குறுதிகளை திமுக அள்ளி தெளித்து இருந்தது. இவையெல்லாம் நிறைவேறியதா, இல்லையா? என்று கேட்டால் இப்படியெல்லாம் திமுக வாக்குறுதி கொடுத்ததா என்று மக்கள் நம்மிடமே திருப்பி கேட்கும் நிலைதான் காணப்படுகிறது.

அதனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டது என்பதை துல்லியமாக அறிய நினைத்தால் தலைதான் சுற்றுகிறது.

எனவே 2021ல் அளித்த 505 வாக்குறுதிகள் என்னென்ன என்பதையும், திமுக அரசு நிறைவேற்றியதாக கூறும் 505 வாக்குறுதிகளையும் ஒப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அதை நீண்டதொரு அறிக்கையாக வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவும் நல்ல யோசனைதான்!

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 636

    1

    0