10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது தெரியுமா..? தேதியை அறிவித்தது தமிழக அரசு!!
Author: Babu Lakshmanan15 May 2023, 3:50 pm
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வெளியானது. இதில், வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக 94 சதவீதத்திற்கும் கூடுதலாக தேர்ச்சி விகிதம் இருந்தது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
அதேவேளையில், 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதியை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.