இனி 600 மதிப்பெண்கள்… 6வது பாடத்திலும் தேர்ச்சி கட்டாயம் ; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்…!!
Author: Babu Lakshmanan16 February 2024, 9:56 am
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களுக்கு இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்பமாக எடுத்து பயில்பவர்களும் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4000 பேர் பிற மொழியை விருப்பமாக எடுத்து பயின்று வருகின்றனர்.
இதற்கு முன்பு வரை விருப்பப்பாடம் எடுத்து படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்று வந்தது. அவர்கள் 35 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், உருது அகாடமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், இனி விருப்பப்பாடம் எடுத்து பயிலும் மாணவர்களின் மதிப்பெண்களை தேர்ச்சி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், இனி அந்தப் பாடத்தில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.