புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பலி…துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது: தமிழக அரசு தகவல்..!!

Author: Rajesh
25 January 2022, 4:36 pm

புதுக்கோட்டை: சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த 11 வயது சிறுவனின் தலையின் இடதுபுறத்தில் பாய்ந்தது.

இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்தும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தடைகோரியும் நார்த்தாமலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி சில தினங்களில் உயிரிழந்தான். இதனை அறிந்ததும், அவனது தந்தை கலைச்செல்வன், தாய் பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதன்படி, புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டு உள்ளது. இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?