12 மணி நேர வேலை…. நாளை யாரும் எதிர்பாராத முக்கிய முடிவு வெளியாகும் : அமைச்சர் சேகர்பாபு சஸ்பென்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 1:08 pm

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் இதை கண்டித்து முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் இந்த சம்பவம் பற்ற வைத்தது.

இதற்கிடையே 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், 12 மணி நேர வேலை மசோதா குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். இதனால் தொழிலாளர்கள் குழப்பம் அடைய வேண்டாம்” என கூறினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…