168 நாட்கள்… திமுகவை வீழ்த்த மெகா பிளான் : அண்ணாமலை போட்ட அரசியல் கணக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan11 July 2023, 9:59 pm
168 நாட்கள்… திமுகவை முறியடிக்க பிளான் : அண்ணாமலை போட்ட அரசியல் கணக்கு!!
ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் வருகை தரவுள்ளார்.
பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் நடைபயணம் தொடக்க ஊரை திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு மாற்றப்பட்டிருப்பது அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
ஜூலை 28 ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணமானது ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. மொத்தம் 168 நாட்கள் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தலைமை.
முதலில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே அண்ணாமலை நடைபயணத்தில் கலந்துகொள்ளும் வகையிலும் மற்ற இடங்களில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
பாஜக தேசியத் தலைமை என்ன நினைத்ததோ தெரியவில்லை, முழு நடைபயணத்திலும் அண்ணாமலையை பங்கேற்க வைத்திருக்கிறது. எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட ‘வேல் யாத்திரை’ இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கவும் அந்த யாத்திரை அடித்தளம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. என் மக்கள் என் நாடு என்ற முழக்கத்துடன் அண்ணாமலை நடத்தும் இந்த நடைபயணமானது சென்னையில் மட்டும் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை தரப்பிலும் அனுமதி பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.