2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் மரணம்… சென்னையில் தொடரும் அதிர்ச்சி… 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!!
Author: Babu Lakshmanan13 June 2022, 11:28 am
சென்னை : சென்னையில் கடந்த 2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் – அலமாதி பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் என்பவரை, வழக்கு விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். நேற்று மாலை 5 மணியளவில் ராஜசேகருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மேலும் உடல்நிலை மோசமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அறிவுறுத்தலின் பேரில், உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 54 நாட்களுக்கு முன்பாக, சென்னை தலைமை செயலக காவல்நிலைய குடியிருப்பு வளாக போலீசார் தாக்கியதால், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் மற்றொரு விசாரணை கைதி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே, விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார் யார் யார்? இரவு காவலில் காவல்நிலையத்தில் வைத்திருந்தவர்கள் யார்? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.