கொலை நகரமாகும் கோவை… 24 மணிநேரத்திற்குள் 2 கொலைகள் : வெளியான அதிர்ச்சி வீடியோ.. விழித்துக் கொள்ளுமா காவல்துறை..?

Author: Babu Lakshmanan
13 February 2023, 1:53 pm

கோவையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கோவை மாநகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்தி என்கிற சத்திய பாண்டி (32) என்பவர் நேற்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சத்தியபாண்டியை வெட்ட முயன்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பியோடிய சத்தியபாண்டி அதே பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல் அந்த வீட்டிற்குள் புகுந்து சத்தியபாண்டியை அரிவாளால் தலை, கை, கால், உடம்பு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே சத்தியபாண்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த சத்திய பாண்டி கடந்த 2020ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து அமைப்பின் நிர்வாகி பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் என தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது நபர் பலியாகினார். மற்றொருவர் பயங்கர வெட்டு காயங்களுடன் அவசர ஊர்தியில் ஏற்றி செல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பாக இருக்கும் நகரின் மையப்பகுதியான கோபாலபுரம் அருகே அரங்கேறிய இந்த கொலை சம்பவம் கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதுடன், போலீசார் மீது விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையாளர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், கோவை ரயில்நிலையம் என நகரின் நாடித்துடிப்பாக இருக்கும் அனைத்து முக்கிய அலுவலகங்களும் இருக்கும் இப்பகுதியில், இதுபோன்ற கொலையை செய்ய குற்றவாளிகளுக்கு எப்படி துணிவு வந்தது..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நடக்கும் என்பதால், ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் சூழலில், இந்த சம்பவம் நடந்தது எப்படி..? என்று சமூக ஆர்வலர்களிடையே கேள்வி உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவைக்கு வர உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது, பாதுகாப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள அலட்சியமாகத்தான் கருதப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, காவல்துறையை திமுக அரசு கட்டுப்படுத்துவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையின் மீதான நம்பிக்கை மக்களிடையே போய் விடும் நிலைமை ஏற்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 570

    0

    0