ரூ.2000 நோட்டுகளை வாங்கக் கூடாது… டாஸ்மாக்கிற்கு வந்த திடீர் உத்தரவு… பின்னணியில் இருக்கும் காரணம் இதுதானா..?

Author: Babu Lakshmanan
20 May 2023, 10:32 am

டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுத்தமான நோட்டுக் கொள்கையை காரணம் காட்டி, இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வாங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான சிறிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 23 முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது சிறிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை (10 நோட்டுகள்) ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரூ.2000 நோட்டுகளை வாங்கினால் டாஸ்மாக் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும், மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற போது, டாஸ்மாக் நிறுவனம் ரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது.

டாஸ்மாக் மூலமாக ஆட்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய அளவிலான கறுப்புப் பணப் பரிமாற்றம் அம்பலமாகியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அபபோதே குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், இந்த முறை டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 463

    0

    0