நாலு எம்பி சீட்டே அதிகம்…! கறார் காட்டும் திமுக… கொதிக்கும் காங்கிரஸ்!!
Author: Babu Lakshmanan3 April 2023, 5:01 pm
தகுதிநீக்கம்
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சூரத் நகர நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததும், அதைத்தொடர்ந்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பு பல மாநிலங்களில் காங்கிரசார் நடத்திய போராட்டமும் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கட்சி மேலிடம் கருதுகிறது.
இதனால் ராகுலின் செல்வாக்கு நாடு முழுவதும் அபரிமிதமாக உயர்ந்திருப்பதாகவும், இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பெரிதும் உதவும் என்றும் காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
இது பிரதமர் கனவில் மிதந்த கட்சிகளுக்கு இனி காங்கிரசை ஆதரிப்பதை தவிர
வேறு வழியே இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் போன்றவை தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் தானாக உருவாகிவிட்டது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் அகம் மகிழ்ந்தனர்.
போராட்டம்
உண்மையில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தான் சத்திஷ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஜார்க்கண்ட், புதுச்சேரி தவிர வேறு எந்த மாநிலங்களிலும் காங்கிரசின் போராட்டம் தீவிரமாக இல்லை. இந்த மாநிலங்களில் கூட தொடக்கத்தில் இருந்த வேகம் தற்போது தணிந்து விட்டது என்றே சொல்லவேண்டும். அல்லது பிசுபிசுத்துப் போனதா? என்பது தெரியவில்லை.
அதுவும் தமிழகத்தில் காங்கிரஸ் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், உண்ணாவிரதம் என்ற எதுவுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய போராட்டங்கள் மக்களின் வரவேற்பை பெற்றதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஏனென்றால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கும்பகோணத்தில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் அவர் உள்பட நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டது பெருத்த ஏளனத்துக்கு உள்ளானது.
“தகவல் கிடைத்ததும் உடனடியாக நான் ரயில் மறியலில் ஈடுபட்டேன். அதனால் என்னுடன் இருந்த சிலரும் இதில் கலந்து கொண்டனர். எனவே எத்தனை பேர் பங்கேற்றனர் என்பது முக்கியமில்லை. ரயிலை மறித்து நிறுத்தியதைத்தான் பார்க்க வேண்டும்” என்று என்னதான் கே எஸ் அழகிரி காரணம் கூறினாலும்
அவசரத்துக்கு ஒரு பத்து பேர் கூட காங்கிரசுக்கு கிடைக்காமலா போனார்கள்? இவர் தன்னை ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்? என்ற கடுமையான விமர்சனங்களும் அவர் மீது பாய்ந்தன.
அதைத்தொடர்ந்து எம்பி பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 26ம் தேதி சென்னையில் காங்கிரசார் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அது மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் காங்கிரஸின் போராட்டம் தீவிரமாக இல்லை.
இதைத்தொடர்ந்தே கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஒரு மாத காலம் தொடர் போராட்டங்கள் மாநிலத்தில் நடத்தப்படும். சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்ற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும்” என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எந்த அளவில் ஆதரவு கிடைக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.
ஆனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை, அவருடைய எம்பி பதவி தகுதி நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரசார் நடத்திய எந்தப் போராட்டமும் எழுச்சியுடன் நடக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஏதோ பெயரளவிற்கு நடத்தினோம் என்று சொல்லும் அளவிற்குத்தான் இருந்தது.
திமுக
இந்தத் தகவலை மாநிலம் முழுவதும் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் அறிவாலயத்திற்கு தெரிவித்தும் உள்ளனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ராகுலுக்கு ஆதரவாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எந்த அளவிற்கு உள்ளது? என்பதை அவர்களிடம் ஆர்வமுடன் கேட்டும் தெரிந்து கொண்டுள்ளார்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமைக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர வேறு எங்குமே காங்கிரஸ் போராட்டங்கள் மக்களின் வரவேற்பை பெறவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு நான்கு சீட்டுகளுக்கும் மேல் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் 15 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற வாக்கு வங்கி இப்போது காங்கிரசுக்கு இல்லை. கட்சி
மிகவும் பலவீனமாக உள்ளது என்ற தகவலையும் திமுக மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கிறார்கள் என்கின்றனர்.
அதேபோல காங்கிரஸில் எம்பி சீட் யாருக்கு கொடுக்கலாம், யாருக்கு கொடுக்கக் கூடாது என்ற ஒரு பட்டியலையும் அவர்கள் தயாரித்து அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால் கரூர் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரி டாக்டர் செல்லக்குமார் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.
அதேநேரம் விருதுநகர் மாணிக்கம் தாகூர், திருச்சி திருநாவுக்கரசர், ஆரணி விஷ்ணு பிரசாத், கன்னியாகுமரி விஜய் வசந்த் ஆகியோருக்கு மறுபடியும் போட்டியிடும் வாய்ப்பை கட்சி மேலிடம் வழங்கலாம் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த தகவல்தான் கே எஸ் அழகிரியை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களால் ராகுலின் இமேஜ் பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அதற்கு நேர் மாறாக நடப்பது ஏன்? என்பது தெரியாமல் மாநில காங்கிரஸ் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
“2024 தேர்தலில் திமுகவிடம் தமிழகத்தில் 14 தொகுதிகளை எப்படியும் கேட்டுப் பெற வேண்டும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த கே எஸ் அழகிரிக்கு திமுக 4 தொகுதிகள்தான் ஒதுக்கும் என்ற தகவல் பேரிடி தருவதாக அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்” என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“கே எஸ் அழகிரியின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டதால் 2024 தேர்தலின் போது அவர் அந்த பதவியில் இருப்பாரா என்பது சந்தேகம்தான்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 40 தொகுதிகளாவது திமுக ஒதுக்கவேண்டும் என்று அவர் எவ்வளவோ போராடிப் பார்த்தார். அறிவாலயத்தில் என்னை திமுகவினர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று கதறியும் அழுதார். ஆனாலும் 25 இடங்களைத்தான் திமுக ஒதுக்கியது. அதில் 18 பேர் வெற்றியும் பெற்றார்கள்.
4 சீட்டுதான்
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு போன்ற பல மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்து விட்டதுபோலவே செயல்பட்டு வருகின்றனர். இதை அழகிரி உணர்ந்து கொண்டதாகவோ, டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவோ தெரியவில்லை. நமது கட்சி தேசிய அளவில் மிகப்பெரியது, மேலிடம் சொன்னால் திமுக கேட்டுக் கொள்ளும். அதிக எம்பி சீட்டுகளை ஒதுக்கி தரும் என்றுதான் அவர் எண்ணினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சோனியாவிடம் வலியுறுத்திதான் திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அப்போதே தனக்கு கட்சியில் எந்த மதிப்பும் இல்லை என்று மனதுக்குள் நினைத்து தலைவர் பதவியிலிருந்து கே. எஸ் அழகிரி விலகிக் கொண்டிருந்தால் திமுக
4 சீட்டுகள்தான் ஒதுக்கும் என்ற பேச்சை அவர் கேட்டிருக்க மாட்டார்.
அதேபோல பிரதமர் கனவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதையும் அதனால்தான் காங்கிரசுக்கு நான்கு எம்பி சீட்டுகளே அதிகம் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கறாராக கூறுவதையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
என்னதான் முட்டி மோதினாலும் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளுக்கு மேல் தமிழகத்தில் காங்கிரசுக்கு திமுக ஒதுக்காது என்பதுதான் கள நிலவரம். திமுகவின் தோள்களில் சவாரி செய்ய நினைத்த தமிழக காங்கிரசுக்கு இது பலத்த அடிதான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் எதார்த்த நிலையை உடைக்கின்றனர்.
0
0