காங்கிரஸ் போட்ட திடீர் கண்டிஷன்… 20க்கு20 புதிய பார்முலா.. திமுகவுக்கு புதிய கிடுக்குப் பிடி!
Author: Babu Lakshmanan28 August 2023, 8:00 pm
26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டிருக்கிறது. வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் தானா? அல்லது மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கும் சேர்த்தா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்லும் தலைவர் யார் என்பது பற்றியும் மும்பையில் முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். அதனால், இக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம் இண்டியா கூட்டணியில் பிரதான கட்சிகளாக உள்ள காங்கிரஸும், பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடந்த ஒரு வருடமாக தீவிர குரல் எழுப்பி வரும் திமுகவும் தங்களது உறுதியான நிலைப்பாட்டை மும்பையில் தெரிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பாஜகவுடன் 280 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதலை சந்திக்கும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் அறிவிக்கப்படவேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிக உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து எதிர் வரும் கூட்டத்திலேயே முடிவு செய்து அறிவித்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சியை கைப்பற்றியவுடன்
துணைப் பிரதமராக திமுக தலைவர் ஸ்டாலினை தேர்வு செய்யலாம் என்ற யோசனையும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் வைக்கப்படும் என்கிறார்கள்.
இதற்கு காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரக்க குரல் எழுப்பி வருகிறார். அதேபோல அவருடைய மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதனால் ஸ்டாலின் துணைப் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என்று காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கூறத் தொடங்கியும் விட்டனர்.
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக பிரியங்காவை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதியை நிறுத்த பரிசீலிக்கலாம் என்ற ஒரு யோசனையை காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகள் கூறி வருகின்றன.
ஆனால் இதை ஏற்பதற்கு திமுக பெரிதும் தயக்கம் காட்டி வருகிறது என்கிறார்கள். ஏனென்றால் ஸ்டாலினை துணை பிரதமராக நியமிக்கும்போது உதயநிதியை தமிழக முதலமைச்சராக்கும் எண்ணத்தில் திமுக இருப்பதுதான்.
என்றபோதிலும் திமுக தரப்பில் சில முக்கிய கோரிக்கைகள் மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், ‘நீட் விலக்கு, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்னும் வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிந்துதான் பிரதமர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி டெல்லியில் உதயநிதி தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் பங்கேற்கவேண்டும் என்பவை வலியுறுத்தப்படலாம்.
இதில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு என்கிற உறுதிமொழியை திமுகவிடம் ஏற்கனவே ராகுல் காந்தி அளித்துவிட்டார் என்பதை அமைச்சர் உதயநிதியின் சமீபகால பேச்சுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
எனினும் அதை அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றிய பின்பு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க தயங்கலாம். ஒரு மாநிலத்திற்கு மட்டும் இச்சலுகையை அளித்தால் அதை பார்த்து வேறு சில மாநிலங்களும் அதே கோரிக்கையை எழுப்பினால் நிலைமை சிக்கலாகிவிடும் என்று எதிர்க்கட்சிகள் கருதும் வாய்ப்பும் உள்ளது. அதனால்தான் மும்பை ஆலோசனைக் கூட்டத்திலேயே நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கையை திமுக தீவிரமாக வலியுறுத்தி சம்மதம் பெற முயற்சிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதேநேரம் எதிர்க்கட்சிகளின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்கிற திமுகவின் யோசனையை காங்கிரஸ் ஏற்குமா? என்பது சந்தேகம்தான்.
“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டதற்கு அக்கட்சி போட்ட சில கண்டிஷன்களை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாக பேசபடுவதுதான் முக்கிய காரணம்” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி கண்டது முதலே கட்சியின் தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுனா கார்கே என அனைவருமே மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதை காண முடிகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே வெற்றி கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இதையடுத்தே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 20 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையை டெல்லி மேலிடம் விதித்துள்ளது. அதை திமுக தலைமை ஏற்றுக் கொண்டதா? இல்லையா? என்பது இதுவரை உறுதியாக தெரிய வரவில்லை.
எனினும் திமுக தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விடும் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதன் அடிப்படையில்தான் ஸ்டாலினுக்கு துணை பிரதமர் பதவி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், கே.வி தங்கபாலு, செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, டாக்டர் செல்லக்குமார் போன்றவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை ஒப்படைத்தால் சொதப்பி விடுவார்கள். திமுக ஆறேழு தொகுதிகளை கொடுத்தால் கூட அதற்கு ஒப்புக்கொண்டும் விடுவார்கள் என்பதால்தான் இந்த முறை 20க்கு 20 என்னும் புதிய பார்முலாவை தமிழகத்தில் கொண்டுவர டெல்லி காங்கிரஸ் மேலிடம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய நேர்ந்தால் திமுகவினர் முக்கிய இலாக்காகளை கேட்பார்கள் என்பதால் கூட இந்த புதிய பார்முலாவில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கலாம். தவிர தொகுதி பங்கீடு குறித்து தனிப்பட்ட முறையிலோ, ரகசியமாகவோ தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் திமுக தலைமையுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று டெல்லி மேலிடம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது என்கிறார்கள்.
வாரணாசியில் மோடிக்கு எதிராக உதயநிதி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுவதெல்லாம் மித மிஞ்சிய கற்பனை. இந்தி தெரியாது போடா என்பவர் ஒருபோதும் வடக்கே தலை வைக்க மாட்டார். அந்த விஷப்பரீட்சையை உதயநிதி ஒரு போதும் விரும்பவும் மாட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் சரிதான்! எதிர்க்கட்சிகளின் கூட்டணி இப்போதே மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விட்டதுபோல் நடந்து கொள்ளும் விதம்தான் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. இதற்கான விடை 2024 மே மாதம் கிடைத்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்!