மநீம, மார்க்சிஸ்ட், விசிகவை சமாளிக்க திமுக புதிய பிளான்… 2024 தேர்தல் வியூகம் கை கொடுக்குமா?

Author: Babu Lakshmanan
6 April 2023, 9:13 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பாரத ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு இணையாக மிகுந்த சுறுசுறுப்பு காட்டி வரும் ஒரு மாநில கட்சி உண்டு என்றால் அது திமுகவாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்கான அத்தனை ஆயத்த பணிகளிலும் திமுக தீவிரமாக இறங்கியும் விட்டது. கருணாநிதி காலத்தில் கூட இல்லாத அளவிற்கு தேர்தல் வியூகங்களை தற்போது அக்கட்சி முன்னெடுத்து வருவதையும் குறிப்பிடவேண்டும்.

இதுவரை எந்தவொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டாத ஆர்வத்தை இப்போது மட்டும் திமுக ஏன் காட்டுகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான்.

இதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் உருவான13 கட்சிகள் கூட்டணி இன்று வரை உறுதியாக இருப்பது. தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த அணியில் இணைந்திருப்பதால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளையும் மிக எளிதில் கைப்பற்றி விடலாம் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.

இப்போது எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்காமல் போனாலும் கூட ஒருவேளை 2024 தேர்தலில் அக்கட்சி அதிக இடங்களை வென்று எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நேர்ந்தால் அப்போது திமுகவின் எம்பிக்கள் பலம் அதிகாரப் பகிர்வில் முக்கிய இடத்தை பெற்றுத் தர உதவும் என்றும் ஸ்டாலின் நம்புகிறார்.

அதன் முன்னோட்டமாகத்தான், அவருடைய தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட சமூக நீதி கூட்டமைப்பு மாநாடு சமீபத்தில் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸின் பாமகவையும் கொண்டுவர ஸ்டாலின் விரும்பினார். அக்கட்சிக்கு நான்கு எம்பி சீட்டுகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் பாமக உள்ளே வந்தால் நாங்கள் உடனே வெளியேறி விடுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி காட்டியதால் பாமகவை தனது அணிக்குள் கொண்டுவரும் முடிவை வேறு வழியின்றி திமுக கைவிட்டது.

ஏனென்றால் வட மாவட்டங்களில் வலுவாக உள்ள விசிகவை இழக்க நேர்ந்தால் எதிர்பார்க்கும் வெற்றியை பெற முடியாமல் போகலாம் என்ற காரணமாக இருக்கலாம். அதேநேரம் மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள பட்டியல் இன மக்களின் ஓட்டுகளும் கிடைக்காமல் போய்விடக் கூடும் என்ற அச்சமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தனது கூட்டணியில் 14 கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை திமுகவிற்கு உள்ளது. வைகோவின் மதிமுக, திமுகவுடனே ஐக்கியமாகி விட்டதால் அக்கட்சி திமுகவின் தேர்தல் சின்னத்தில் போட்டியிடச் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடும். அதனால் மதிமுக பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டிய நிலை ஒரு போதும் திமுகவுக்கு ஏற்படாது. அதேநேரம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு இந்த முறை திமுக வாய்ப்பு தருமா? என்பது சந்தேகம்தான்.

2019 தேர்தல் போல காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி.

நடிகர் கமல் கட்சிக்கும் சேர்த்து காங்கிரஸுக்கு ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் விரும்பினால் மக்கள் நீதி மய்யத்தை கை சின்னத்தில் போட்டியிட கேட்டுக் கொள்ளலாம். ஒருவேளை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கமல் விரும்பினால் காங்கிரசுக்கு நான்கு தொகுதிகள்தான் கிடைக்கும். ஆனாலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருப்பதால் அறிவாலயம் ஒதுக்கும் தொகுதிகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பொறுத்தவரை தங்களுடைய தேர்தல் செலவுக்கு 2019 போல் 25 கோடி ரூபாயை திமுக ஒதுக்கி கொடுத்தால் ஒரு தொகுதியே போதும் என்று அவை ஒதுங்கிக் கொள்ளலாம். அதேநேரம் தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி பதவியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குகிறோம் என்று சொல்லி திமுக சமாளிக்கவும் செய்யலாம்.

ஏனென்றால் கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட்டின் ஆதரவும் இருந்தால்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது அதிகார பலம் மிக்க அமைச்சர் பதவிகளை திமுகவால் கேட்டு பெற முடியும்.

விசிகவை பொறுத்தவரை இந்த முறை திருமாவளவனுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கப்படலாம். விழுப்புரம் எம்பியாக உள்ள ரவிக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

அல்லது திருமாவளவனுக்கு மாநிலங்களவை எம்பி பதவி தருகிறோம் என்று திமுக உறுதி அளித்து அந்த ஒரு இடத்திலும் கூட திமுகவே போட்டியிடலாம். அதேநேரம் சிறுபான்மையினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் லீக் கட்சிக்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தல் போலவே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கி விடும்.

“இந்த புதிய பிளான் மூலம் திமுக 30 தொகுதிகளில் போட்டியிடும் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள மற்ற பிரதான கட்சிகள் ஒன்பது தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தாலும் நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்று கூறி அந்தக் கட்சிகளை திமுக சரிக்கட்டி விடும்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“தேசிய அளவில் 30 எம்பிக்களை கைவசம் வைத்திருந்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் நேரத்தில் அது தனக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று திமுக நம்புகிறது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலை போல திமுக கூட்டணியால் 38 இடங்களை தமிழகத்தில் கைப்பற்ற முடியுமா? என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் தற்போது மாநிலத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை படுமோசமாக உள்ளதை குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்பது உறுதி.

அதேபோல கடுமையான மின் கட்டண உயர்வு,சொத்து வரி அதிகரிப்பு, ஆவின் பால் விலை உயர்வு,கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு,
விண்ணை மட்டும் விலைவாசி போன்றவற்றையும் எதிர்க்கட்சிகள் மக்கள் முன்பாக கொண்டு செல்லும்.

என்னதான் மகளிர்க்கு சாதாரண டவுன் பஸ்களில் இலவச பயணம், ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பதை திமுக
பிரச்சார உத்தியாக மேற்கொண்டாலும் கூட சட்டம்- ஒழுங்கு சீர்குலைவால் உயிருக்கே ஆபத்து என்கிற அச்ச உணர்வு மக்களுக்கு ஏற்படும்போது ஆட்சியில் கிடைக்கும் பணப் பயன்களை அவர்கள் பெரிதாக கருதாத மன நிலையைத்தான் ஏற்படுத்தும். இது தேர்தலில் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தராமல் போகக் கூடும்.

அதேபோல தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களை முக்கிய நாளிதழ்கள், டிவி செய்தி சேனல்களில் வெளிவராமல் திமுக சாமர்த்தியமாக பார்த்துக் கொண்டாலும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த திமுகவினரின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அத்துமீறல்கள், நில அபகரிப்புகள், அடாவடி செயல்கள் அந்தந்த பகுதியில் உள்ள மக்களிடையே வாய் மொழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம். இது தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக பிரதிபலிக்கும் வாய்ப்புகளே அதிகம்.

இதனால்தான் அதிமுக- பாஜக கூட்டணி அமைவதை ஓ பன்னீர்செல்வம் போலவே திமுகவும் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. மும்முனைப் போட்டி இருந்தால் 39 தொகுதிகளையும் அள்ளி விடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது. அதனால் ஓபிஎஸ், ttv தினகரன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து விடாமல் தடுக்க அத்தனை முயற்சிகளையும் திமுக மேற்கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இப்போதைய சூழலில் 2024 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் 18 முதல் 22 இடங்களை கைப்பற்றி விடும் என்பதுதான் கள நிலவரம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 386

    0

    0