தமிழகத்தில் முன்னா, சோட்டா அறிமுகம்… ரேஷன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்கள் விற்பனை

Author: Babu Lakshmanan
6 October 2022, 8:09 pm

சென்னை ; டியுசிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கூட்டுறவு கடைகளில் 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டியுசிஎஸ் நிறுவனத்தின் சேவை பிரிவுகள் பெட்ரோல் நிலையங்களில், இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும், இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள சிறிய அளவு சிலிண்டர்கள் விற்பனை துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் விற்பனை துவங்கி வைக்கப்பட்டது, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், 24 வகையான உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பத்து ரூபாய் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கான திட்டத்தையும் துவக்கி வைத்தனர்.

அப்போது, அமைச்சர் பெரியசாமி பேசியதாவது :- 2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்கும் இந்த விழா உங்கள் முன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திட்டம் பயனுள்ள, சிறப்பான, எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் திட்டமாக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சிலிண்டர்களை ஹிந்தியில் முன்னா, சோட்டா என்கிறார்கள். நாம் வேண்டுமானால் அனல், தணல் என வைத்துக் கொள்ளலாம் என கூறினார். டெபாசிட் தொகையோடு 5 கிலோ சிலிண்டர் 1515.50 ரூபாய்க்கும் ரீபிள் செய்வதற்கு 575.50 ரூபாய்க்கும் கிடைக்கும். 2 கிலோ சிலிண்டர் டெபாசிட் தொகையோடு 958 ரூபாய்க்கும், ரீபிள் செய்வதற்கு 250 ரூபாய்க்கும் பெற்றுக் கொள்ளலாம்.

அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும். சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இதனால் சாலையோர சிறு கடை வியாபாரிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 539

    0

    0