3 பொதுத்தொகுதி கேட்கும் திருமா! திக்கு முக்காடும் திமுக?….

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 9:32 pm

3 பொதுத்தொகுதி கேட்கும் திருமா! திக்கு முக்காடும் திமுக?….

திருச்சி நகரில் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை நடத்தி முடித்ததில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதை காண முடிகிறது. ஏனென்றால் திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகள் கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி இது போன்றதொரு மாநாட்டை நடத்திக் காட்டியதில்லை, அவ்வளவு ஏன் அண்மையில் சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டை
கூட விசிகவின் திருச்சி மாநாடு மிஞ்சிவிட்டது, என்று பரவலாக பொதுவெளியில் பேச்சு எழுந்து இருப்பதுதான் இதற்கு காரணம்.

தனது கட்சியின் வலிமையை காட்டுவதற்காக இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் கூட இதில் வேறு சில அரசியல் கணக்குகளும் உள்ளன என்பது வெளிப்படை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளை விட எங்களுடைய பங்களிப்புதான் அதிகமாக இருக்கும் என்பதை விசிக சொல்லாமல் சொல்கிறது.

மேலும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முயற்சித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளியேற தயாராக இருக்கிறோம் என்பதை அறிவாலயத்திற்கு மறைமுகமாக உணர்த்துவதாகவும் இந்த மாநாடு அமைந்துவிட்டது என்பதும் நிஜம்.

அதேநேரம் தமிழகத்தில் காங்கிரசுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு தகுந்தாற்போல் முதல் கட்ட பேச்சுவார்த்தையை டெல்லி மேலிட தலைவர்களுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்ததற்கும் விசிகவின் திருச்சி மாநாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் திமுக தலைமையிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிட விரும்பும் ஐந்து தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளது. அதில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம், சிதம்பரம் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் மூன்றும்
கூடுதலாக இடம் பிடித்துள்ளன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிதம்பரமும், விழுப்புரமும் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள். மற்ற மூன்றும் அனைத்து வகுப்பினரும் போட்டியிடக் கூடிய பொதுப் பிரிவில் வருபவை.

2021தமிழக தேர்தலில் விசிக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் வானூர், காட்டுமன்னார்கோவில் செய்யூர், அரக்கோணம் ஆகிய நான்கும் தனித் தொகுதிகள்.
நாகைப் பட்டினம், திருப்போரூர் இரண்டும் பொதுத் தொகுதிகள்.

அப்போது எங்களுக்கு இரண்டு பொதுத்தொகுதிகளாவது ஒதுக்குங்கள் நாங்கள் வென்று காட்டுகிறோம் என்று திருமாவளவன் திமுகவிடம் அடம் பிடித்து வாங்கி அதில் திருப்போரூர், நாகைப்பட்டினம் தொகுதிகளில் விசிகவை வெற்றி பெறவும் வைத்து விட்டார். அதேநேரம் தனித்தொகுதிகளான வானூர், அரக்கோணம் ஆகியவற்றில் விசிக தோற்றுப் போனது.

இந்த நிலையில்தான் பட்டியல் இன சமூக மக்களிடம் மட்டுமின்றி விசிகவுக்கு தமிழகத்தில் அனைத்து வகுப்பினரிடமும் நல்ல செல்வாக்கு உள்ளது, அதனால் எங்களுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை தருகிறீர்களோ, இல்லையோ கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று விசிக அறிவாலயத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது போலவே இம்முறையும் நாங்கள் போட்டியிடுவோம், திமுக சின்னத்தில் நிற்க மாட்டோம் என்பதிலும் விசிக உறுதியாக உள்ளது.

ஆனால் தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் பொதுத் தொகுதிகளை திடீரென விசிக கேட்பது திமுகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

கடலூரை விசிகவுக்கு ஒதுக்க திமுகவிற்கு எந்த தயக்கமும் இருக்காது. ஏனென்றால் தற்போதைய திமுக எம்பி ரமேஷுக்கு தொகுதியில் அவ்வளவாக நல்ல பெயர் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரை மீண்டும் அங்கே நிறுத்தினால் தோல்வி நிச்சயம் என்று கூறப்படுவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்குவதில் திமுக தலைமைக்கு எந்த சிக்கலும் இருக்காது. அதேநேரம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடலூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதால் அதை யாருக்கு கொடுப்பது என்ற இன்னொரு புதிய தலைவலி திமுகவுக்கு ஏற்படலாம்.

ஆகையால் விசிகவுக்கு பெரம்பலூரை ஒதுக்கி தரும் வாய்ப்புள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சியை விசிகாவுக்கு திமுக விட்டுக் கொடுக்குமா என்பதும் மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் தற்போது அந்தத் தொகுதியின் எம்பியாக இருக்கும் கௌதம சிகாமணி அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். கௌதம சிகாமணி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் கூட அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கப்படலாம். அல்லது திமுக சார்பில் வேறு யாராவது நிறுத்தப்படும் வாய்ப்புதான் உள்ளது. அதனால் கள்ளக்குறிச்சி விசிகவுக்கு கிடைக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு, திருமாவளவனின் விசிகவுக்கு இந்த முறை மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பாக மிகப்பெரிய கூட்டத்தை திருமாவளவன் திரட்டி காண்பித்து விட்டார் என்று கூறப்படுவதுதான். அதேநேரம் இந்த மாநாட்டை திருமாவளவன் வெற்றிகரமாக நடத்தியதற்கு பின்னணியில் இருந்தவர், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் என்கிறார்கள்.

விசிகவில் உறுப்பினராக சேருவதற்குரிய இணையதளத்தை உருவாக்கி கொடுத்த ஆதவ் அர்ஜுன் நடத்தும் தி வாய்ஸ் ஆப் காமன் என்ற அமைப்பில், 2021 தமிழக தேர்தலுக்காக திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தில் பணியாற்றிய 30 பேர் தேர்தல் தொடர்பான சர்வேக்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும் விசிக போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை ஆதவ் அர்ஜுன் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது.

எனவே அவருக்கு விசிக சார்பில் எப்படியாவது ஒரு தொகுதியை பெற்றுக் கொடுத்து விடவேண்டும் என்பதற்காகதான் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை திருமாவளவன் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் திமுக -காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பற்றிய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறதாம். 14 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குங்கள் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்த காங்கிரஸுக்கு இது மிகப்பெரிய ‘ஷாக்’தான். வேண்டுமானால் இரு வாரங்கள் கழித்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது ஆறு தொகுதிகள் என்கிற அளவுக்கு எண்ணிக்கை சற்று கூடலாம்.

விசிகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்குவதில் திமுகவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. அதேநேரம் தமிழகத்தில் இம்முறை பலத்த மும்முனைப் போட்டி இருப்பது வெளிப்படையாக தெரிகிற நிலையில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் அது அக்கட்சிக்கு முழுமையான வெற்றியை தருமா? என்ற தயக்கம்தான் திமுக தலைமையிடம் உள்ளது.

எது எப்படியோ, திருச்சி விசிக மாநாடு தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க ஆப்பு வைத்து விட்டது என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 390

    0

    0