தடையை உடைத்த 3 அடி மருத்துவர்.. சட்டப் போராட்டம் நடத்தி சாதித்து காட்டிய இளைஞர்!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2024, 4:57 pm
குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது.
ஆனால் அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர் டாக்டராகமுடியாது, அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018ம் ஆண்டு கணேஷிற்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது.
ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்ட போராட்டத்தை ஆரம்பித்தார்.
இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது.
இதையடுத்து, பின் 2019இல் கல்லூரியில் சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார்.தற்போது பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இது குறித்து கணேஷ் கூறும்போது, பிளஸ் 2 முடித்தவுடன், நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றேன். இவை அனைத்தையும் முடித்து மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.
இந்த உயரத்தில் இருப்பதால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை எளிதாக அணுக முடியாது, சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என, பள்ளி முதல்வர்களிடம் பேசி முடிவெடுத்தேன்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றேன். டாக்ராக ஆகப்போகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்களே சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். ஆனால், போகப்போக புரிந்துகொண்டனர் என்றார்.
தொடர்ந்து, முதன்முதலில் என்னை பார்க்கும் நோயாளிகள் சற்று வியப்புடன் பார்த்தாலும், போகப்போக புரிந்துகொள்கிறார்கள். அவர்களது ஆரம்பகட்ட அணுகுமுறையை நானும் ஏற்கிறேன். தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், போகப்போக அவர்கள் மகிழ்ச்சியாக வந்து செல்கிறார்க்ள் என்று தெரிவித்துள்ளார்.