ஏர் இந்தியா சொல்வது எல்லாமே பொய்;அவமானம் உங்களுக்கு சகஜம்:விளாசிய கிராமி விருது இசையமைப்பாளர்..!!

Author: Sudha
3 August 2024, 6:02 pm

3 முறை கிராமி விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், இன்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். பிசினஸ் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரிக்கி கேஜை, எகானமி வகுப்பில் பயணிக்குமாறு கூறிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர், அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ளார் ரிக்கி கேஜ். அந்தப் பதிவில், ‘இந்த ஓராண்டில் 3வது முறையாக எனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிசினஸ் வகுப்பில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். பெங்களூரூ செல்வதற்காக, மும்பை விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கு கவுண்டரில் இருந்த நிஷிதா சிங் என்ற ஊழியர், என்னை எகானமி வகுப்பில் செல்லுமாறு கூறியதுடன், அவமரியாதையுடன் நடந்து கொண்டார்.

தங்களின் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏர் இந்தியா நிறுவனம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். நான் தற்போதும் விமான நிலையத்தில் தான் இருக்கிறேன். ஆனால், காலை 9.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்று விட்டது, எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட தனக்கு எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்றும், இதற்காக தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது பதிவுக்கு பதிலளித்திருந்த ஏர் இந்தியா நிறுவனம், உங்களுக்கான தீர்வை வழங்குவது பற்றி மெசேஜ் செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ஏர் இந்தியா நிறுவனம் பொய் சொல்வதாக ரிக்கி கேஜ் பதிவிட்டுள்ளார்.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..