கொளத்தூரில் திண்டாடும் 3000 குடும்பங்கள்… கொந்தளிக்கும் கூட்டணி கட்சி.. CM ஸ்டாலினுக்கு திடீர் நெருக்கடி!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 4:21 pm
Quick Share

சென்னையில் இந்த வாரம் 31 முதல் 3-ம் தேதி முடிய நான்கு நாட்கள் பெய்த மழை 27 சென்டி மீட்டராக பதிவாகி உள்ளதாக வானிலை இலாகா அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத முதல் வாரம் 3 நாட்களில் கொட்டி தீர்த்த 41சென்டி மீட்டர் மழைபோல் தற்போதைய மழை இல்லை என்றாலும் கூட சென்னை நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர், தேங்கியதையும், வீடுகளுக்குள் புகுந்ததையும் பார்க்க முடிந்தது.

ஆனால் திமுக அரசோ, சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதால், கடந்த ஆண்டு போல மழைநீர் தேங்கவில்லை, பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் வழியாக சென்றுவிட்டது. தொடர்ந்து தேக்கமடைந்த சில பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு விட்டது என்று தெரிவித்தது.

அதேநேரம், “முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்படவில்லை
50 சதவீதம் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நாங்கள் இன்னும் முழங்கால் அளவு மழை நீரில்தான் நடந்து போக வேண்டிய அபாய நிலை உள்ளது.சொல்லப்போனால் இன்றும் நாங்கள்
மழை நீரில் தத்தளித்தே வருகிறோம்” என்ற குற்றச்சாட்டை கண்ணீர் மல்க அதே தொகுதியில் அடங்கியுள்ள ஜவகர் நகர், பெரவள்ளூர், ஜி கே எம் காலனி, வெற்றி நகர், கே சி கார்டன், டிபி தோட்டம், 70 அடி ரோடு, சிவ இளங்கோ சாலை, வண்ணாங்குட்டை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சில டிவி செய்தி சேனல்களில் வேதனையோடு பேட்டி அளித்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்தது போல மழை கொட்டி தீர்த்தால் எங்களின் கதி அதோ கதிதான் என்று அவர்கள் புலம்புவதையும் கேட்க முடிகிறது.

இது உண்மைதான் என்று சொல்வது போல தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் சிலர் அப்பகுதிக்குள் மழைநீர் தேங்கிய காட்சிகளை படம் எடுக்க முயற்சித்தபோது அவர்கள் திமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் கொளத்தூர் தொகுதியில் வசிக்கும் 3000 குடும்பங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்னொரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து 3000 குடும்பங்கள் வீடுகளை கட்டி இருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது, அந்தக் குடும்பங்களுக்கு கடந்த காலங்களில் கனமழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் அளித்த ஷாக்கை விட பல மடங்கு அதிகம் என்பதை நிச்சயமாக கூற முடியும்.

இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கொந்தளித்தும் உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவசர கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

சொத்து வரி, மின் கட்டணம் கடும் உயர்வு, குடிநீர் வரி அதிகரிப்பு போன்ற விவகாரங்களில் தோழமையின் சுட்டுதல்போல், பெயரளவிற்கு கண்டன அறிக்கைகளை வெளியிட்டு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதுபோல இல்லாமல், 3000 குடும்பங்களின் மீதான திமுக அரசின் நடவடிக்கை குறித்து உண்மையிலேயே
இப் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து முதலமைச்சருக்கு கே பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி இருப்பது போலவே தோன்றுகிறது.

அதுவும் முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே
இப்படி நடக்கலாமா? என்று அவர் வேதனையுடன் ஆதங்கப்படுவதும் அதில் தெரிகிறது.

பாலகிருஷ்ணன் எழுதிய
அந்த கடிதத்தில், “சென்னை கொளத்தூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெற்குத் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றன. இந்த வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீர் – கழிவு நீர் வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். ஆதார் மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 1994ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த்துறை அரசாணை எண். 300, நாள் 18.04.1994 மூலம் கொளத்தூரில் புல எண் 53ல் உள்ள 67.30 ஏக்கர் நிலத்தை அரசு ஊழியர்களுக்கு மாடி வீடும் கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மேற்படி நிலம் அமைந்துள்ள ஏரியைக் கைவிட்டு பொதுப்பணித்துறையில் இருந்து 29.6.1993 நாளிட்ட அரசாணை எண் 975 ஆணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி மேற்கண்ட பகுதி நீர்நிலை புறம்போக்கு என்றும், இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டுமென்றும் தெரிவித்து செங்குன்றம்
நீர்வளத்துறை பாசனப்பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அவர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் இப்பகுதியில் வாழும் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக தங்களிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.

இப்பிரச்சனை சம்பந்தமாக கடந்த மே மாதம் 27ம் தேதி அன்று தங்களை நேரில் சந்தித்து இம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். தற்போது மீண்டும் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் வாங்க மறுத்த மக்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எனவே, முதலமைச்சர், இப்பிரச்சினையில் தலையிட்டு, தங்களின் தொகுதிக்குட்பட்ட பல தெருக்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் 3,000 குடும்பங்கள் அப்பகுதியிலேயே நிரந்தரமாக குடியிருப்பதற்கு நிலவகை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு அம்மக்களை அங்கேயே குடியமர்த்தி பாதுகாக்க வேண்டுமெனவும், அம்மக்களை வெளியேற்றுவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

“3000 குடும்பத்தினர் 40 வருடங்களாக சொத்து வரி
குடிநீர்-கழிவு நீர் வரி செலுத்தி வருகின்றனர் என்ற தகவலும்
அவர்கள் வசிக்கும் பகுதி புறம்போக்கு நிலம் என்பதும்
இத்தனை ஆண்டுகள் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது, ஆச்சரியமான விஷயம்தான்.

அது தவிர ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்பதும் பல் வேறு அரசுத்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்பதையே காட்டுகிறது” என்று சமூக நல ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

“இது உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதிக்கம், செல்வாக்கு காரணமாகவும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது காலங்காலமாக அந்த தெருக்களில் வசித்து வருவதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த பயன்பாட்டு அட்டைகளை அரசு அதிகாரிகள் வழங்கி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் எப்படி அளித்தார்கள் என்ற மிகப் பெரிய கேள்வியும் எழுகிறது.

3000 குடும்பங்கள் என்றால், அவற்றில் எப்படியும் 10 ஆயிரம் பேருக்கு குறையாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக இப்பகுதி மக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் அவர்களை பகடை காய்களாக பயன்படுத்தி இருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவதற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள்தான், சிக்கிக் கொள்வார்கள்.

மேலும் நீர் நிலையை ஒட்டிய அக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவேண்டும் என்ற ஹைகோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருப்பதால், அதை இடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு
அதிகாரிகள்தான் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மை. அப்படித்தான் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பெத்தேல் நகர், அரும்பாக்கம் ராதா கிருஷ்ணன் நகர் பகுதிகளில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் நீர்நிலைகளையொட்டி கட்டிய வீடுகளை அரசு அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு இடித்து தள்ளத் தொடங்கினர்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று வீடுகள் கட்டிக் கொடுத்த பின்னரே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்படும் என்ற முடிவை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் நெருக்கடியான சூழலும் ஏற்பட்டது.

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில்
40 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலைப் பகுதிகளை ஒட்டி வசித்து வரும் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும் மாற்று இடங்களில் வீடுகளை கட்டித்தர தமிழக அரசு உறுதி அளிப்பதுடன் அதை விரைந்து நிறைவேற்றவும் வேண்டும். அதுவரை இப்பகுதியில் உள்ள 3000 குடும்பத்தினரை வெளியேற்றாமல் பாதுகாப்பதுதான், சொந்த தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் காட்டும் கருணையாக இருக்கும்.

ஏனென்றால், இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும், ஏற்கனவே ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும்
முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியும் இருக்கிறார்”
என்று அந்த சமூக ஆர்வலர்கள், அரசுக்கு ஆலோசனை கூறுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வரும் இந்த நேரத்தில் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில்
3000 குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது, வேதனைக்குரிய ஒன்றுதான்!

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 501

    0

    0