ரூ.4 கோடி விவகாரம்…. இரு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு சம்மன் ; இன்று நேரில் ஆஜராக உத்தரவு

Author: Babu Lakshmanan
21 May 2024, 9:34 am
Quick Share

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்.,19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இப்படியிருக்கையில், கடந்த ஏப்ரல் 4ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை நோக்கி செல்லவிருந்த ரயிலில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் சென்ற சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணத்தை சென்னையில் இருந்து ரயில் மூலம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்த செல்வதாக தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுவரை பாஜக பிரமுகர் கோவர்தன் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக நிர்வாகி கோவர்தன் வீடு, ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி ; தமிழக அரசு உத்தரவு

இந்த நிலையில் தான் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும். இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மாநில அளவில் பொறுப்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல்கள் வந்த நிலையில் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் உள்ளிட்டோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் கூட இன்றைய தினம் கேசவ விநாயகம் மற்றும் எஸ்ஆர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்றும், இவர்கள் 2 பேரும் தற்போது பாஜகவின் தேர்தல் பணிக்கான வெளிமாநிலத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிள்ளன.

Views: - 165

0

0