தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை… அந்த 4 மாவட்டங்களில் அதி பயங்கர கனமழைக்கு வாய்ப்பு.. உச்சகட்ட அலர்ட்…!!!
Author: Babu Lakshmanan18 December 2023, 9:12 am
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவில்பட்டியில் கடந்த 24 மணிநேரத்தில் 34 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. கோவில்பட்டி பணிமனை சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்துகளை இயக்குவதில் சிரமமாகியுள்ளது. நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கையில் கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.