அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய 4 அமைச்சர்கள்! திமுகவின் பாதை மாறுகிறதா?

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 2:31 pm

திமுக அரசுக்கு கடந்த வாரம் மிகவும் சோதனையானது என்றே சொல்லவேண்டும். இந்த 7 நாட்களில், மூன்று மூத்த அமைச்சர்களும், ஒரு இளைய அமைச்சரும் நடந்துகொண்ட விதமும் தெரிவித்த கருத்துகளும் அக்கட்சிக்கு பெரும் தலைவலியாகவே அமைந்துவிட்டது.

அது தமிழகத்தில் அத்தனை அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கேலியாக விமர்சிக்கும் அளவிற்கும் மாறிப் போனது.

தொடங்கி வைத்த அமைச்சர்

அந்த வாரம் முதலில் இதை தொடங்கி வைத்தவர் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

கடந்த 23-ம் தேதி குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பாக வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியனும், அவருடைய கட்சி நிர்வாகிகள் சிலரும் சென்னையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது அவர்களை நாற்காலியில் உட்கார வைக்காமல் அமைச்சர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களுடன் சென்றிருந்த தென்காசி நாடாளுமன்ற தனித் தொகுதி திமுக எம்பி தனுஷ்குமாரும் 10 நிமிடங்கள் வரை நின்று கொண்டே இருந்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் திமுகவில் ஓர் அமைச்சர் சாதியை காரணம் காட்டி தீண்டாமை நோக்குடன் செயல்பட்டதாக எதிர்ப்புக் குரலும் வேகமாக ஒலித்தது.

ஓசி சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி

அடுத்ததாக தனது துடுக்குத்தனமான பேச்சால் சிக்கிக்கொண்டு தவிப்பவர், மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி. உயர்கல்வித்துறை அமைச்சரான அவர்
செப்டம்பர் 26ம் தேதி ஒரு கூட்டத்தில் பெண்களை பார்த்து, ‘உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு முதலமைச்சர் 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா… வாய திறங்க; இப்போ டவுன் பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் ‘ஓசி’லதான போறீங்க’ என்று பேசிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. அது இன்னும் ஓய்ந்தபாடில்லை.

மறுநாளே, அதாவது கடந்த 27ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பஸ்கள் பற்றி தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அமைச்சரின் அசால்ட் பேச்சு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதாக அதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது சென்னையில் இருந்து கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 3,500 ரூபாயும், திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு 3500 முதல் 4000 ரூபாயும் முன்பதிவின் போது கட்டணமாக வசூலிக்கிறார்கள் என்று புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்துப் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில் “ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசு பேருந்து கட்டணத்துடன், ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். அரசுப்பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் தொழில்தான் செய்கிறார்கள். தவிர ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை” என்று ஆம்னி பஸ் அதிபர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதே அமைச்சர்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கடந்த 28ம் தேதி வேலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், “குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்க சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அம்மாவுக்கும் ஆயிரம் பொண்ணுக்கும் ஆயிரம் கொடுக்கும் ஒரே ஆட்சி இதுதான்” என்று சிரித்துக்கொண்டே கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கொந்தளித்த குஷ்பு

இதனால் மனம் குமுறிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அமைச்சர்களின் பேச்சு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோபம் கொப்பளிக்க பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அதில்,”சமீபகாலமாக அரசின் திட்டங்கள் மற்றும் பெண்கள் குறித்து திமுக அமைச்சர்கள் அநாகரிகமாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதித்துள்ளாரா? அமைச்சர்கள் தங்களது ஆணவ பேச்சின் மூலம் பெண்களின் கண்ணியத்தையும், மரியாதையும் தொடர்ந்து பறித்து வருகிறார்கள்.

எந்தப் பெண்ணும் ஓசிப் பேருந்து பயணத்தை கேட்கவில்லை. எந்தப் பெண்ணும் ஆதரவு கேட்டு பிச்சை எடுக்கவில்லை. ஏழைகளுக்கு உதவுவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நான் தெளிவாக உணர்ந்துள்ளேன்.

பெண்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை இழிவாகப் பேசும் திமுக தலைவர்களை சுயமரியாதையை பற்றி பேசும் அதே கட்சியை சேர்ந்த பெண்கள் ஏன் கண்டித்து பேசவில்லை?

ஏழைகள் மீது பிச்சைக் காசுகளை வீசிவிட்டு பின்னர் அதை அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான திட்டம் என்று கூறுவதுதான் திமுகவின் ஐடியாவா?”என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் “திமுக அரசு தோல்வி கண்டுள்ளது. பெண்களை அவமானப்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம் சர்ச்சை பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள், வேறு எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை’
என்று குறிப்பிட்டார்.

“திமுக அரசில் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரும் இளைய அமைச்சர்களில் சிவசங்கர், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோரும் மாறிமாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது, கடந்த 5 மாதங்களாக அதிகரித்து இருக்கிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் தோரணையும் விமர்சனத்திற்கு உள்ளாகும் விதமாக அமைந்து விடுகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முதல்வரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களையும் தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களையும், அதிகமாக கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். இதனால்தான், பல அமைச்சர்கள் வரம்பு மீறி பேசி வருகின்றனர் என்று திமுகவினரே வேதனையோடு கூறும் அளவிற்கு இன்று நிலைமை காணப்படுகிறது.

அதுவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, இந்துக்களை மிகவும் இழிவுபடுத்தி பேசியது திமுகவில் உள்ள 90 சதவீத இந்துக்களின் மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. இதை உணர்ந்து கொண்டதால்தான் திமுகவினர் அனைவரும் அடக்கி வாசிக்கவேண்டும் என்பதுபோல ஸ்டாலின் அண்மையில் ஒரு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

மடை மாற்றம் செய்த அமைச்சர்

ஆ ராசாவின் கருத்தை முதலில் ஆதரித்து பேசிய அமைச்சர் பொன்முடியும் கூட பின்னர் சனாதன தர்மத்தை எதிர்க்கும் விதமாகத்தான் அவர் அப்படிப் பேசினார் என்று
பிரச்னையை மடை மாற்றம் செய்யவும் நேர்ந்தது.

அதேபோல தனது சமீபத்திய கேலி பேச்சுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதும், இப்போது அவர் ஓசியிலதான போறீங்க? என்று நான் விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்” என்கிறார்.

திமுக அமைச்சர்களும், தலைவர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகும் விதமாக எதையாவது பேசினால் அது அக்கட்சிக்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கட்சிக்குத்தான் ஆபத்து

திமுக ஆட்சி ஓராண்டை கடந்து விட்டதால் இனி நாம் என்ன பேசினாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று திமுக தலைவர்கள் கருதுவது தவறு. ஏனென்றால் சமூக ஊடகங்கள் மூலம் இன்று இந்த உலகில் நடப்பது அனைத்துமே உடனுக்குடன் மக்களைப் போய் சேர்ந்து விடுகிறது.

குறிப்பாக, டவுன் பஸ்ல நீங்க ஓசிலதான போறீங்க? என்று பெண்களிடம்
பொன்முடி கேள்வி எழுப்பிய அடுத்த ஓரிரு நாட்களிலேயே அதை அறிந்த சுயமரியாதை கொண்ட கோவை மூதாட்டி ஒருவர் திமுக அரசின் இலவச டவுன் பஸ் சேவையை பயன்படுத்தாமல் கண்டக்டரிடம் அடம்பிடித்து டிக்கெட் எடுத்து பயணம் செய்தார் என்பதையும் அது தொடர்பான வீடியோ காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி தமிழக பெண்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதையும் திமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இதை உணர்ந்து அவர்கள் நடக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 739

    0

    0