5 மாநில சட்டப்பேரவை தேர்தல்… தோல்வியை சந்தித்த முக்கிய தலைவர்கள்… அட இவரும் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?
Author: Babu Lakshmanan10 March 2022, 7:30 pm
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தலைவர்களுக்கு தோல்வி முகமே கிடைத்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடந்த உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதில், பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், கோவா சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. எம்ஜிபி, சுயேட்சை என மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஒரு இடம் தேவைப்படும் நிலையில், சுயேட்சை மற்றும் 2 இடங்களில் வென்ற எம்ஜிபி கட்சியின் ஆதரவுடன் பாஜக கோவாவில் ஆட்சியமைக்கிறது.
இதேபோல, உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. அதேபோல, முதல்முறையாக, பஞ்சாப்பில் காங்கிரசை தோற்கடித்து ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்து அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சரும், அண்மையில் புதிய கட்சியை தொடங்கியவருமான கேப்டன் அம்ரீந்தர்சிங், பட்டியாலா தொகுதியில் போட்டியிட்டு, ஆம்ஆத்மி வேட்பாளர் அஜித் படேல் சிங் கோலியிடம் தோல்வியை தழுவினார். அம்ரீந்தர் சிங், கடந்த 2002 முதல் 2007 வரையிலும், 2017 முதல் 2019 வரையிலும் இருமுறை பஞ்சாப் முதலமைச்சராக செயல்பட்டவராவார்.
இவரைத் தொடர்ந்து, உத்தரகாண்ட்டின் முன்னாள் முதலமைச்சரும், நடப்பு தேர்தலில் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளருமான அறியப்பட்ட ஹரிஸ் ராவத் லால்குன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இவர் பாஜகவின் மோகன்சிங் பிஷ்த் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். மத்திய அமைச்சராகவும், 2014ம் ஆண்டு உத்தரகாண்ட் முதலமைச்சராகவும் ராவத் செயல்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் உடைவதற்கு காரணமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படாத காரணத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவராவார். இவர் பஞ்சாப்பின் கிழக்கு அமிர்தரசில் போட்டியிட்டார். இவர் ஆம்ஆத்மி வேட்பாளரான ஜீவன் ஜோத் கவுரிடம் தோல்வியடைந்தார். கிரிக்கெட் வீரராகவும், அம்ரீந்தர் சிங் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவராவார்.
இதேபோல, சுக்பீர்சிங் பாதல், சிரோமணி அகாலி தளத்தின் சார்பில் பஞ்சாப்பின் ஜலலாபாத்தில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஜெக்தீப் கம்போஜிடம் படுதோல்வியடைந்தார். இவர், 2009 முதல் 2017ம் ஆண்டு வரையில் பஞ்சாப்பின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் ராஜினாமாவிற்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக செயல்பட்டவர் சரண்ஜித் சிங் சன்னி. இவர், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சம்கூர் சாஹிப், பதாவூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இதில் ஒன்றில் கூட அவர் வெற்றி பெறவில்லை. பஞ்சாப்பின் முதல் தலீத் முதலமைச்சராக இவர் இருந்து வந்தார்.