500 எம்பிபிஎஸ் சீட்கள் போயே போச்சா…? கோட்டை விட்ட திமுக அரசு… நீட் தேர்வில் வென்றவர்களின் கனவு சிதைகிறதா…?

Author: Babu Lakshmanan
29 May 2023, 4:49 pm

சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி வாரியம் இந்த ஆண்டு ரத்து செய்திருப்பது தமிழகத்தில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

மாநிலத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் இயங்கி வருகிறது. 38 அரசு கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தற்போது மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு தற்போது மத்திய இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

பயோமெட்ரிக் வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இந்த மூன்று கல்லூரிகளுக்கும் மத்திய இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தத் தகவல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுகவுக்கு பேரதிர்ச்சி தரும் ஒன்றாகவே அமைந்துள்ளது.

ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500 எம்பிபிஎஸ் சீட்டுகள் குறையும்போது நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது நிச்சயம்.

இந்த நிலையில் மத்திய இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக திமுக அரசின் சுகாதாரத்துறை தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டே மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளது.

அதேநேரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவது போல மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் உருவெடுத்துள்ளது.

அவர் நிருபர்களிடம் பேசும்போது, “சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சிசிடிவி கேமராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா? அண்மையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள். தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள். இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரத்தில் வேறு சில முக்கிய காரணங்களும் உள்ளன என்பதை முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி விஜயபாஸ்கர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தானது அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசு சிறு சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தாத காரணத்தினால்தான் தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்காத வகையில் 3 கல்லூரிகளுக்கும் அனுமதி பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏனென்றால் வரும் காலங்களில் மேலும் பல அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது 1945 எம்பிபிஎஸ் சீட்டுகள்தான் தமிழகத்தில் இருந்தன. அதிமுக முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 5225 இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதை பத்திரமாக பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியவில்லை. சிறு சிறு விஷயங்களில் கூட அலட்சியமாக இருந்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் மீது திமுக அரசு பாய்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில்
இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட சுகாதாரத்துறை தீவிர கவனம் செலுத்தியது. அதனால் எங்கள் ஆட்சி காலத்தில் இது போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை செயலிழந்து உள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகள் 550 சீட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பொருத்துவது சாதாரண நடைமுறைதான்.

எனினும் பணியிடங்கள் காலியாக உள்ளதை தேசிய மருத்துவ ஆணையத்திடம்
மறைப்பதற்காக பயோமெட்ரிக்கை பயன்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 450 பேராசிரியர்கள், 550 துணை பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. திமுக அரசு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் இந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதாரத்துறையின் செயல்பாடு இதேபோல் நீடித்தால் மேலும் சில மருத்துவகல்லூரி அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்புள்ளது” என்று உண்மையை உடைக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையிலும், இதேபோல் பல காரணங்களை கூறி திமுக அரசு மந்த கதியில் செயல்பட்டு வருவதை சுட்டிக் காண்பித்து இருக்கிறார்.

“தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் ரத்து செய்யப்பட்ட ஏற்பளிப்பை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு  வரும் நிலையில், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. அவ்வாறு எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரும்பான்மையான அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நிறைவு செய்ய இயலாது. இருக்கும் பேராசிரியர்களை பணி நிரவல் செய்தாலும் கூட,  தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறக்குறைய 40 சதவீதம் அதாவது 10 கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவற்றின் ஏற்பளிப்பு நீக்கப்படக் கூடும்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மருத்துவப் பேராசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால்தான் ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 மாதங்களுக்கு முன்  இடைக்காலத் தடை விதித்த நிலையில், அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தடையை நீக்கி உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டால், மருத்துவப் பேராசிரியர்களாகவும், இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியான மருத்துவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். இதை செய்தால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல் போய்விடும்.

தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களையும் கொண்ட மாநிலம் என்பதாகும். இந்த மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தின் சிறப்பே,  இழுக்காக மாறிவிடும். அதைத் தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கி  மருத்துவப் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அதன் மூலம், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்து தகுதிகளுடன் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

“அமைச்சர் மா சுப்பிரமணியம் எந்த ஒரு விஷயத்திலும் மத்திய அரசை குறை கூறுவது வாடிக்கையாகி விட்டது. தங்கள் தரப்பில் தவறு இருந்தாலும் கூட அதை ஒப்புக் கொள்வதில்லை. அதற்கான பழியை தூக்கி மத்திய அரசின் மீது போட்டு விடுகிறார். நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லையே என்பதால் அவரிடம் இப்படி கோபம் வெளிப்படுகிறது என்றே கருதத் தோன்றுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி மற்றும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு குறைபாடு காரணமாக அங்கீகாரத்தை திரும்ப பெறும் வகையிலான நிகழ்வு நடப்பது இதுதான் முதல் முறை என்று மருத்துவ கல்வி துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகளே கூறுகின்றனர்.

பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடுதான் ஒரு மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர் என்பதற்கு சான்று ஆகும். அது போன்று சிசிடிவி காட்சிகள்தான் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றதற்கு சான்று. இவை இரண்டும் முறையாக இல்லாத காரணத்தால் இந்த நிகழ்வுகள் நடந்து இருக்கிறது என்பது வெளிப்படை.

காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாததால்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டது. ஆனால் இதை ஒப்புக்கொள்ள மனமின்றி “அண்மையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டது. தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்” என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் சம்பந்தமே இன்றி கருத்துகளை தெரிவிக்கிறார். மத்திய பாஜக அரசு மீது ஏதாவது ஒரு குற்றத்தை சாட்டி
திசை திருப்புவதற்காக அதை அரசியல் பிரச்சினையாகவும் மாற்றுகிறார்.

இதனால் சர்ச்சையிலும் அவர் தானாகவே சிக்கிக் கொள்கிறார். மூன்று மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு கோட்டை விட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் சுகாதாரத் துறையை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியமோ இதில் தனது பொறுப்பை தட்டி கழிக்கிறார், என்பது மட்டும் நன்கு புரிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 511

    0

    0