500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது கண்துடைப்பா?…அமைச்சர் மீது பாய்ந்த கணைகள்!

தமிழக அமைச்சர்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானவர் யார் என்று கேட்டால் அதற்கான பதிலை கண்களை மூடிக்கொண்டு செந்தில் பாலாஜி என்று சொல்லி விடலாம்.

ஏனென்றால் அவர் வசம் இருக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு என்னும் இரண்டு முக்கிய துறைகளும் தமிழக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலும், தலைவலியும் தரும் ஒன்றாகவே மாறிவிட்டதுதான்.

கள்ளச்சாராய பலிகள்

கடந்த மாதம் விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் மது குடித்த 25 பேர் உயிரிழந்த சம்பவமும், 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்ததும் அவர்களில் 15 க்கும் மேற்பட்டோர் கண்பார்வை இழந்துவிட்டதாக கூறப்படுவதும் கொடுமையிலும் கொடுமை.

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் 23 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டாலும் கூட தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வந்த பாரில் மது அருந்தி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் போனது கடும் விமர்சனத்திற்கும், கண்டனத்துக்கும் உள்ளானது.

குடிக்கு அடிமையான தந்தையால் மகள் தற்கொலை

இந்த நிலையில்தான் நான்கு நாட்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சின்னராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை தினமும் அடித்து உதைக்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாத வேதனையில் அவருடைய 16 வயது மகள் விஷ்ணு பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 410 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்த விஷ்ணு பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போதுதான்
எனது ஆத்மா சாந்தி அடையும்” என்று உருக்கமாக குறிப்பிட்டும் இருந்தார்.

அனிதாவை போலத்தான் அந்த சிறுமியும்

இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இணையாக விஷ்ணு பிரியாவின் தற்கொலை பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனாலும், அனிதாவின் மரணத்தை வைத்து அன்று அரசியல் நடத்திய திமுக, விசிக, மதிமுக,காங்கிரஸ் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் விஷ்ணு பிரியா விஷயத்தில் வாயே திறக்கவில்லை.

500 மதுக்கடைகள் மூடுவதாக உறுதி

என்றபோதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுநாளே தமிழகத்தில் உள்ள 5329 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவித்ததை மீண்டும் உறுதி செய்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது விஷ்ணு பிரியா அளித்த அதிர்ச்சி வைத்தியத்தின் விளைவாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன காரணத்திற்காக இழுத்து மூடுகிறார் என்பது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விரிவான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது செந்தில் பாலாஜி மீது அவர் போட்ட புதிய குண்டு போலவே இருக்கிறது

மனமகிழ் மன்றங்கள்

அதில் அவர் கூறும்போது, “எங்கெல்லாம் நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் பேருந்து நிலையங்கள் உள்ளதோ அங்கெல்லாம் புற்றீசல் போல இன்று மனமகிழ் மன்றங்கள் உருவாகி விட்டன. டாஸ்மாக் பார்கள் மட்டுமின்றி தனியார் பங்களிப்போடு மதுபானம் விற்பனை செய்ய 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2000 மனமகிழ் மன்றங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி வழங்கி இருக்கிறார். இவர் அறிவித்துள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா?….

மனமகிழ் மன்றங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இருந்தால்
லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வியாபாரம் ஆகாது என்பதால் எங்கெல்லாம் அமைச்சர் லஞ்சம் பெற்றுக் கொண்டு மன மகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளாரோ அங்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு உள்ளும் ஊழல் மட்டுமே ஒளிந்திருக்கும். ஒரு போதும் தமிழக மக்களின் நலன் ஒளிந்திருக்காது.
இவர்கள் மூடக்கூடிய டாஸ்மாக் கடைகள் எல்லாம் இவர்கள் அனுமதி வழங்கிய மனமகிழ் மன்றங்கள் நன்றாக ஓடவேண்டும். அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் 20 லட்சம் ரூபாய் என சம்பாதிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் அந்த டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்.

எனவே இந்த விவகாரத்திலும் தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடுவது என்பது அவருடைய சுய நலனுக்காகத்தானே தவிர தமிழக மக்களின் நலனுக்காகவோ டாஸ்மாக் நிறுவனத்தின் நலனுக்காகவோ அல்ல” என்று காட்டமாக தாக்கியுள்ளார்.

சீல் மட்டும்தான்.. வழக்குப்பதிவு இல்லையே

இதேபோல் அவருடைய மகனும் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவருமான
ஷியாம் கிருஷ்ணசாமியும் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகள் மூலம் திமுக அரசை கடுமையாக சாடி இருக்கிறார். “டாஸ்மாக்கை நம்பித்தான் ஒட்டுமொத்த திமுக அரசும் இயங்குகிறது. புதிய தமிழகம் கட்சியின் எச்சரிக்கையின் விளைவாக – திருட்டுத்தனமாக திமுகவினர் நடத்தி வந்த 4000க்கும் மேற்பட்ட சட்டவிரோத பார்கள் கடந்த 10 நாட்களில் சீல் வைக்கப்பட்டுள்ளது! ஆனால் ஒரு திமுக திருடன் மீது கூட வழக்கு பதிவு செய்யவில்லை.

அனுமதியின்றி பார் நடத்தியவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து, இரண்டு வருடங்களாக பார் மூலம் வந்த 50,000 கோடி ரூபாய் வருமானத்தை வசூல் செய்து அரசு கணக்கில் செலுத்தவேண்டும்.

2000 மனமகிழ் மன்றங்களுக்கு FL 2 License அனுமதி அளித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகள் மூடும் அறிவிப்பு ஏமாற்று வேலையே! அரசு வருமானத்தை திமுகவினருக்கு திசை திருப்பும் திட்டம் இது” என்று கொந்தளித்து உள்ளார்.

“டாக்டர் கிருஷ்ணசாமியும் அவருடைய மகன் ஷியாமும் சமீப காலமாக திமுக அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பதற்காக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிப்பதுடன் அது தொடர்பாக ஏற்படக்கூடிய விபரீதங்களை தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்” என்று சமூக நல அலுவலர்கள் கூறுகிறார்கள்.

கண்டுகொள்ளாத கூட்டணி கட்சிகள்

“குறிப்பாக கடந்த மாதம் 15 ம் தேதி சென்னை நகரில் பேரணி நடத்தி ஆளுநர் ரவியிடம் டாஸ்மாக் மற்றும் அரசு பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி அது தொடர்பாக 250 பக்க ஆதாரங்களையும் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்தார். அத்துடன் இதன் மீது விசாரணை நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்”என்றும் வலியுறுத்தினார்.

அவர் ஆளுநரிடம் புகார் கூறிய நேரத்தில்தான் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை இருபதை கடந்திருந்தது. குறிப்பாக இவர்கள் அனைவருமே விளிம்பு நிலை மக்கள் என்பதால் மிகவும் வேதனை அடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் பட்டியலின மக்களுக்காக என் உயிரையும் அர்ப்பணிப்பேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக வீர வசனம் பேசி வரும் விசிக தலைவர் திருமாவளவன்தான் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கவேண்டும். ஆனால் திமுக கூட்டணியில் அவர் இருப்பதால் என்னவோ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

குடிகார மாநிலம்?

2000 மனமகிழ் மன்றங்களை தொடங்குவதற்கு அனுமதி கொடுத்ததால்தான் 500 டாஸ்மாக் கடைகளை விரைவில் மூடுவோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி
அறிவித்து இருக்கிறார் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் தமிழகத்தையே குடிகார மாநிலம் என்று மற்றவர்கள் ஏளனமாக பேசும் நிலையை உருவாக்கி விடும் என்பது நிச்சயம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இத்தகைய செயல் திமுக அரசின் வீழ்ச்சிக்கு கூட காரணமாக அமைந்து விடும் வாய்ப்பும் உண்டு. ஏற்கனவே கரூர், கோவை, ஈரோடு, சென்னை நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரி சோதனையால் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வேறு அமைச்சரிடம் பொறுப்பு கொடுக்கப்படுமா?

இந்த நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் 4.7 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

இப்படி ஆண்டுக்கு ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படுவது இலவசமாக அளிக்கப்பட்டு வரும் நூறு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை திமுக அரசு மறைமுகமாக வசூலிக்கும் திட்டமோ என்று சந்தேகப்படவும் வைக்கிறது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கேட்டாலே தமிழக மக்களுக்கு நடுக்கமும் கலக்கமும்தான் வருகிறது. எனவே அவரிடம் இருக்கும் மின்சாரம், மதுவிலக்கு துறை இரண்டையுமே வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதுதான் சரியாக இருக்கும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆனால் அதற்குரிய வாய்ப்பு 2024 தேர்தலுக்கு முன் அமையுமா? என்பது சந்தேகம்தான்!

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

10 minutes ago

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

56 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

58 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

2 hours ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

2 hours ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

This website uses cookies.